கன்னியாகுமரி மாவட்டத்தில் குறைந்த வட்டியில் கடன் தருவதாக விளம்பரம் செய்து 1,500 பேரிடம் 3.5 கோடி ரூபாய் மோசடி செய்த நிதி நிறுவனம் மீது பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்துள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல், களியல், வேர்கிளம்பி, அழகிய மண்டபம் ஆகிய 4 இடங்களில் கடந்த 3 மாதங்களாக AA பைனான்சியல் சர்வீஸ் என்ற பெயரில் நிதி நிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்த நிறுவனத்தில் பணிபுரிய படித்த இளைஞர்கள் தேவை என விளம்பரம் செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் 70 பேர் இந்த நிறுவனத்தில் பணியில் சேர்ந்தனர். அவர்களை கொண்டு பல பகுதிகளில் உள்ள மக்களிடம் குறைந்த வட்டியில் அதிக கடன் தொகை வழங்கப்படும் என மார்கெட்டிங் செய்து அதன் மூலம் சுமார் 1,500 பேர் இந்த நிறுவனத்தில் 1,500 ரூபாய் முதல் 50 ஆயிரம் ரூபாய் வரை வைப்பு நிதியாக பெற்றதாக தெரிகிறது.
இந்நிலையில், அனைவருக்கும் கடன் வழங்கப்படும் என கூறி வந்த நிலையில் தற்போது பொதுமக்களுக்கு பணத்தை கொடுக்காமல் பணியாளர்களுக்கு ஊதியமும் வழங்காமல் பொதுமக்கள் பணம் சுமார் 3.5 கோடி ரூபாயை மொத்தமாக அபேஸ் செய்து மோசடி செய்தது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து பாதிக்கப்பட்ட மக்கள் மற்றும் நிறுவனத்தின் பணியாளர்கள் இன்று நாகர்கோவிலில் உள்ள மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர் அதில், மோசடியில் ஈடுபட்டு தலைமறைவான கரூர் மாவட்டத்தை சேர்ந்த சியாம் ஜோஸ்வா, தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த துர்க்கா தேவி உட்பட 6 பேர் மீது தகுந்த குற்றவியல் நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டு தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.