அம்பாசமுத்திரம் காவல் நிலையத்தில் பல்வீர் சிங் ஐபிஎஸ் அதிகாரியால் விசாரணை கைதிகள் சித்திரவதைக்கு ஆளாகப்பட்ட விவகாரம் பூதாகரமாக வெடித்தது. இதைத் தொடர்ந்து அந்த ஐபிஎஸ் அதிகாரி பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். காவல் ஆய்வாளர்கள் பலர் காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றப்பட்டனர்.
இந்த நிலையில் இந்த வழக்கை விசாரிப்பதற்காக சிறப்பு விசாரணை அதிகாரியாக மூத்த ஐஏஎஸ் அதிகாரி அமுதாவை தமிழக அரசு நியமித்தது. கடந்த வாரத்தில் தனது முதல் விசாரணையை துவங்கிய ஐஏஎஸ் அதிகாரி அமுதாவிடம் பாதிக்கப்பட்ட நபர்களில் ஒருவர் கூட நேரில் சென்று ஆஜராகி புகார் அளிக்கவில்லை.
இதையடுத்து வரும் 17 ஆம் தேதி இரண்டாம் கட்டமாக விசாரணை மேற்கொள்ள இருக்கிறார். அதில், பாதிக்கப்பட்டவர்கள் நேரில் வந்து ஆஜராகி புகார் அளிக்கலாம் என தெரிவித்திருந்தார்.
இதையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் வழக்கறிஞர் மகாராஜன் புதிய தலைமுறையிடம் கூறியதாவது, பலரின் அறிவுரைகளை கேட்ட பிறகு திங்கட்கிழமை விசாரணை அதிகாரி அமுதா ஐஏஎஸ் அவர்களை நேரில் சந்தித்து சித்திரவதை செய்யப்பட்ட விஷயத்தை பாதிக்கப்பட்டவர்கள்புகாரளிக்க இருக்கிறார்கள்.
அதிகாரி அமுதா அவர்களின் விசாரணை அறிக்கையை சமர்ப்பித்த பிறகு தமிழக அரசு நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை என்றால் விசாரணை அதிகாரி என்ன செய்வார்.
குற்றம் நிரூபிக்கப்பட்ட பிறகும் ஐபிஎஸ் என்ற ஒரே காரணத்திற்காக வழக்குப் பதிவு செய்ய தொடர்ச்சியாக தமிழக அரசு மறுத்து வருகிறது.
இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் ஐபிஎஸ் அதிகாரி பல்வீர் சிங் மீது வழக்குப் பதிவு செய்யச் சொல்லி வழக்கு தொடர இருக்கிறோம். மேலும் தமிழக ஆளுநரை நேரில் சந்தித்து தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சரியில்லாமல் இருக்கிறது. பொது மக்களுக்கு பாதுகாப்பு இல்லை எனக் கூறி மனு கொடுக்க உள்ளோம் என்றார்.