சென்னை மாநகராட்சியின் முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி கடந்த 4 ஆம் தேதி இமாச்சலப் பிரதேசத்திற்கு பயணம் மேற்கொண்ட நிலையில், அவரது கார் விபத்தில் சிக்கி சட்லஜ் ஆற்றில் விழுந்தது. இதில் காரை ஓட்டிச்சென்ற ஓட்டுநர் பலியான நிலையில், உடன் சென்ற வெற்றி துரைசாமியின் நண்பர் கோபிநாத் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வெற்றி துரைசாமி மட்டும் மாயமானார்.
இந்நிலையில் சட்லஜ் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட வெற்றி துரைசாமியை தேடும் பணியில் தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர், ராணுவத்தினர், ஊர்க்காவல்படையினர் என பலரும் ஈடுபட்டு வந்தனர். தொடர்ந்து தேடும் பணி தீவிரமாக நடந்து வந்தது.
இதற்கிடையே விபத்து நடந்த இடத்தில், மனித உடல் பாகங்களின் திசுக்கள் கண்டறியப்பட்ட நிலையில், அவை மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. இதையடுத்து சென்னை சிஐடி நகரில் உள்ள சைதை துரைசாமியின் குடும்பத்தினரிடம் ரத்தம் சேகரிக்கப்பட்டு, மருத்துவப் பரிசோதனைக்காக சென்னை டிஜிபி வளாகத்தில் உள்ள தடயவியல் துறைக்கு அது அனுப்பப்பட்டது.
இந்நிலையில் விபத்து நிகழ்ந்து 8 நாட்கள் ஆன நிலையில் சம்பவ இடத்தில் இருந்து சுமார் 2 - 6 கி.மீ தொலைவில் வெற்றி துரைசாமியின் உடல் இன்று கண்டெடுக்கப்பட்டது. இதையடுத்து பிரேத பரிசோதனைக்காக வெற்றியின் உடல் இமாச்சலிலுள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
பாறை இடுக்குகளில் அவரது உடல் இருந்ததாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் அவர் உடல் சென்னை கொண்டுவரப்படும் என சொல்லப்பட்டுள்ளது. மேலும் விரிவான விவரங்களை, கீழ் இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் காணலாம்...