வேங்கைவயல் விவகாரம்: இரண்டு ஆண்டுகள் ஆகியும் ஒருவரை கூட கைது செய்யாதது ஏன்? - உயர்நீதிமன்றம் கேள்வி

வேங்கைவயல் சம்பவம் நடந்து இரண்டு ஆண்டுகளாகியும், இதுவரை எவரையும் கைது செய்யாதது ஏன் என சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
வேங்கைவயல்
வேங்கைவயல்pt web
Published on

புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயல் கிராமத்தில் குடிநீர் தொட்டியில் மலம் கலந்த விவகாரம் தொடர்பாக வழக்கறிஞர் மார்க்ஸ் ரவீந்திரன் என்பவர் சிபிஐ விசாரணை கோரி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி மகாதேவன் மற்றும் நீதிபதி முகமது சபீக் அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கை விசாரித்து வரும் சிபிசிஐடி தரப்பில், அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

வேங்கைவயல் நீர்தேக்கத்தொட்டி
வேங்கைவயல் நீர்தேக்கத்தொட்டிபுதிய தலைமுறை

மனுதாரர் தரப்பில், வழக்கறிஞர் ஜி.எஸ்.மணி ஆஜராகி, கடந்த 2022ம் ஆண்டு டிசம்பர் மாதம் நடந்த இந்த சம்பவம் தொடர்பாக எவரும் இதுவரை கைது செய்யப்படவில்லை எனவும், இந்த வழக்கு தொடர்பாக ஜூலை மாதத்துக்குள் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டிருந்தது. ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என குற்றம் சாட்டி வாதிட்டார்.

இதற்கு பதிலளித்து அரசுத்தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் ரவீந்திரன் மற்றும் முனியப்பராஜ் ஆகியோர், இதுவரை 389 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. குரல் மாதிரிகள் சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. சந்தேகத்துக்குரிய மூன்று பேருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

வேங்கைவயல்
’அப்படி சொன்னால் அவர் என் தாயே இல்லை’ ’நான் காலிஸ்தான் ஆதரவாளர்தான்’- அம்ரித்பால் சிங் எம்.பி பதில்!

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், சம்பவம் நடந்து இரண்டு ஆண்டுகள் கடந்தும் காவல் துறையினரால் ஒருவரை கூட கைது செய்ய முடியாதது ஏன் என கேள்வி எழுப்பினர். மேலும் மனிதாபிமானமற்ற முறையில் குடிநீர் தொட்டியில் மலம் கலந்த விவகாரம் தொடர்பாக அறிக்கைகளை மட்டும் பெற்றுக் கொண்டிருக்க முடியாது எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

உயர்நீதிமன்றம்
உயர்நீதிமன்றம் PT

இதற்கு பதிலளித்த கூடுதல் தலைமை வழக்கறிஞர் ரவீந்திரன், புலன் விசாரணை முன்னேற்ற நிலையில் உள்ளது. ஆதாரங்கள் கிடைத்ததும் உடனடியாக கைது நடவடிக்கைகள் எடுக்கப்படும். உயர் நீதிமன்றம் நியமித்த நீதிபதி சத்தியநாராயணன் ஆணையம், இடைக்கால அறிக்கையை தாக்கல் செய்துள்ளது. இன்னும் இறுதி அறிக்கை தாக்கல் செய்யவில்லை. வழக்கு விசாரணை முடியும் நிலையில் உள்ளது என விளக்கமளித்தார். இதையடுத்து, வழக்கு தொடர்பாக தீர்க்கமான முடிவை எட்ட வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், இரு வாரங்கள் அவகாசம் வழங்கி, விசாரணையை தள்ளிவைத்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com