இறுதிக்கட்டத்தை நெருங்கும் வேங்கைவயல் விவகாரம்: மனித கழிவுகள் யாருடையது? - வெளியான சோதனை முடிவுகள்

நீர்த்தேக்க தொட்டியில் கலந்த மனித கழிவுகள் ஒரு பெண் மற்றும் 2 ஆண்களுடையது என்று பரிசோதனை முடிவில் தெரியவந்துள்ளது.
Vengaivayal issue
Vengaivayal issue PT (file picture)
Published on

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் கலந்த மனிதக் கழிவுகள் ஒரு பெண் மற்றும் இரண்டு ஆண்களுடையது என்று மனிதக் கழிவுகள் கலந்த நீரை பகுப்பாய்வு மையத்தில் சோதனை செய்ததில் உறுதிசெய்யப்பட்டுள்ளது.

ஏற்கெனவே 11 பேருக்கு டிஎன்ஏ சோதனை நடத்த நீதிமன்றம் அனுமதி அளித்துள்ள நிலையில் தற்போது இந்த தகவல் வெளியாகியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் கடந்த டிசம்பர் 26 ஆம் தேதி அங்குள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மனிதக் கழிவுகள் கலந்த விவகாரம் தமிழகத்தையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. இது தொடர்பாக வெள்ளனூர் காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்தனர். பின் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி நீரை சோதனை செய்வதற்காக அதை பகுப்பாய்வு மையத்திற்கு காவல்துறை மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் அனுப்பி வைத்திருந்தனர்.

இதனையடுத்து இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டார். அதன்படி கடந்த மூன்று 4 மாத காலமாக சிபிசிஐடி போலீசார் வேங்கைவயல், இறையூர், முத்துக்காடு ஆகிய பகுதிகளிலுள்ள 147 நபர்களிடம் விசாரணை செய்து சாட்சியங்களை பதிவு செய்திருந்தனர்.

Vengaivayal issue
Vengaivayal issue PT (file picture)

இந்நிலையில் இந்த வழக்கில் முன்னேற்றம் ஏதும் ஏற்படாததால் ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் ஒரு விசாரணை ஆணையத்தையும் சென்னை உயர்நீதிமன்றம் அமைத்துள்ளது. விரைவில் அந்த ஆணையம் விசாரணை செய்யும் என்றும், அதற்கு தமிழக அரசு வேண்டிய ஏற்பாடுகளை ஆணையத்திற்கு செய்து கொடுக்கும் என்றும் சட்டசபையில் முதல்வர் அறிவித்தார்.

இதற்கிடையில் சிபிசிஐடி போலீசார் விசாரணை செய்த 147 நபர்களில் 11 பேர் இந்த வழக்கில் சம்பந்தப்பட்டிருப்பார்கள் என்று சிபிசிஐடி போலீசார் சந்தேகத்துள்ளனர். இவர்களுடைய டி.என்.ஏ, சோதனைக்கு உட்படுத்த வேண்டும் என்று சிபிசிஐடி தரப்பில் புதுக்கோட்டை வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டிருந்தது.

மேலும் இந்த வழக்கில் சந்தேகப்படும்படியான உள்ள நபர்களான அதே பகுதியைச் சேர்ந்த புதுக்கோட்டை ஆயுதப்படை காவல்துறையில் பயிற்சி காவலராக பணியாற்றி வரும் முரளி ராஜாவும், மற்றொருவரும் சம்பவ தினத்தன்று அந்த பகுதியில் உள்ள வாட்ஸ்அப் குழுவில் இது தொடர்பாக ஆடியோவாக தகவல் பரிமாற்றம் செய்திருப்பது தெரியவந்தது. அவர்களின் ஆடியோவை உண்மைதன்மை கண்டறியும் சோதனைக்கு உட்படுத்தி அவர்களுடைய குரல் மாதிரி பரிசோதனை செய்ய வேண்டும் என்றும் அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இதனை விசாரித்த புதுக்கோட்டை எஸ்சி எஸ்டி சிறப்பு நீதிமன்ற நீதிபதி சத்யா, பயிற்சி காவலர் முரளி ராஜா உள்ளிட்ட மூன்று பேர் சென்னையில் உள்ள பகுப்பாய்வு மையத்தில் குரல் பரிசோதனைக்காக ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டதோடு, இந்த வழக்கில் சம்பந்தப்பட்டதாக 11 பேரை முதல் கட்டமாக டிஎன்ஏ பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மாதிரி பரிசோதனைக்கு உட்படுத்தவும் அனுமதி அளித்து அறிவுறுத்தியது.

Vengaivayal issue
Vengaivayal issue PT (file picture)

இந்த நிலையில் தான் இந்த வழக்கு தொடர்பாக வெளியாகியுள்ள புதிய தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதன்படி மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் கலந்த மனித கழிவுகள் ஒரு பெண் மற்றும் இரண்டு ஆண்களுடையது என்று சென்னை தடயவியல் அறிவியல் ஆய்வகத்தில் மேற்கொள்ளப்பட்ட நீர் பரிசோதனை முடிவில் தெரியவந்துள்ளது.

விரைவில் நீதிமன்ற உத்தரவின் பேரில் முதல் கட்டமாக 11 பேரிடம் டிஎன்ஏ பரிசோதனை செய்யப்பட உள்ளது. இதன் சோதனை முடிவுகள் வந்த பிறகு இவர்களில் யாருடைய கழிவு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் கலந்தது என்ற விவரம் தெரியவரும் என சிபிசிஐடி போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com