செய்தியாளர் சுப.முத்துப்பழம்பதி
புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் அமைந்துள்ள குடிநீர்த் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்டது தொடர்பாக வழக்கின் 494 நாட்களாக சிபிசிஐடி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது வழக்கின் விசாரணை இறுதிக்கட்டத்தை எட்டி இருப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், அதே கிராமத்தைச் சேர்ந்த மணமேல்குடி காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றும் முரளி ராஜா என்பவருக்கு சட்டப்பிரிவு 41A-ன்படி சிபிசிஐடி காவல்துறையினருக்கு சம்மன் அனுப்பி இருந்தனர். அதன் அடிப்படையில் முரளி ராஜா தனது வழக்கறிஞர்களுடன் பகல் 11.10 மணியளவில் புதுக்கோட்டை சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜரானார். அவரிடம் வழக்கு தொடர்பாக ((7 மணிநேரத்திற்கும் மேலாக )) சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை நடத்தினர். காவலர் முரளி ராஜாவிற்கு ஏற்கனவே குரல் மாதிரி பரிசோதனை செய்யப்பட்டது. மேலும், 2 முறை சம்மன் அனுப்பி அவரிடம் சிபிசிஐடி காவல்துறையினர் விசாரணை நடத்தி இருந்தனர்.
வேங்கைவயல் சம்பவம் நடந்த சமயத்தில், காவலர் முரளி ராஜா உள்ளிட்ட இளைஞர்கள் சமூக வலைதளங்களில் பேசிய ஆடியோ பதிவை முக்கிய ஆதாரமாகக் கொண்டு சிபிசிஐடி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வழக்கு இறுதிக்கட்டத்தை எட்டி இருப்பதாக கூறப்படும் நிலையில், காவலர் முரளி ராஜாவிடம் மீண்டும் விசாரணை நடத்தி இருப்பது புதிய திருப்பமாக பார்க்கப்படுகிறது.