வேங்கைவயல்: சமூக நல்லிணக்கத்தை ஏற்படுத்த 3 சமூக மக்கள் சேர்ந்து சமத்துவ பொங்கல் வழிபாடு!

வேங்கைவயல்: சமூக நல்லிணக்கத்தை ஏற்படுத்த 3 சமூக மக்கள் சேர்ந்து சமத்துவ பொங்கல் வழிபாடு!

வேங்கைவயல்: சமூக நல்லிணக்கத்தை ஏற்படுத்த 3 சமூக மக்கள் சேர்ந்து சமத்துவ பொங்கல் வழிபாடு!
Published on

புதுக்கோட்டை மாவட்டம் இறையூர் வேங்கை வயல் கிராமத்தில் சமூக நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையில் மூன்று சமூக மக்கள் பங்கேற்று நடத்திய சமத்துவ பொங்கல் விழா இன்று அங்குள்ள அய்யனார் கோயிலில் பாகுபாடின்றி நடைபெற்றது. தமிழ்நாட்டின் 3 அமைச்சர்கள் பங்குபெற்று பொங்கல் விழாவை சிறப்பித்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம் இறையூர் வேங்கைவயல் கிராமத்தில் பட்டியலின சமூக மக்கள் வசிக்கும் பகுதியில் உள்ள குடிநீர் மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் மனிதக்கழிவு கலக்கப்பட்ட சம்பவம் கடந்த மாதம் 26 ஆம் தேதி கண்டறியப்பட்டது. இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் அந்த சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை தமிழ்நாடு போலீசார் கைது செய்ய முயன்றும் முடியாமல் போனதால், தற்போது அந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இதனிடையே சம்பந்தப்பட்ட இறையூர் கிராமத்தில் சாதிய பாகுபாடுகள் உள்ளதாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில், தமிழ்நாடு அரசு மற்றும் மாவட்ட நிர்வாக சார்பில் அந்த கிராமத்தில் சமூக நல்லிணக்கத்தை ஏற்படுத்த பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக இன்று அரசு சார்பில் சமத்துவ பொங்கல் விழா, அக்கிராமத்தில் உள்ள அய்யனார் கோயிலில் நடைபெற்றது.

இதனை முன்னிட்டு அந்த கிராமத்தில் வசிக்கும் மூன்று சமூக மக்களிடம் இருந்தும் அரிசி, வெல்லம், பருப்பு உள்ளிட்ட பொங்கல் வைக்க தேவையான பொருட்களை அதிகாரிகள் பெற்று ஒரே பாத்திரத்தில் அய்யனார் கோயிலில் சமத்துவ பொங்கல் வைத்தனர்.

இந்த சமத்துவ பொங்கல் விழாவில் அந்த கிராமத்தில் வசிக்கும் மூன்று சமூக மக்களும் பங்கேற்ற நிலையில், பொங்கல் விழாவில் தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன், ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் மற்றும் மாநில ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குனர் ஆனந்த் உள்ளிட்டோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர். பின்னர் அவர்கள் அனைவரும் அங்குள்ள அய்யனார் கோயிலில் ஒன்றிணைந்து கூட்டாக சமத்துவ வழிபாடு நடத்தினர். பின்னர் அங்கு வந்திருந்த மக்கள் அனைவருக்கும் பொங்கல் வழங்கப்பட்டது.

அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறுகையில், “இறையூர் கிராமத்தில் வசிக்கும் மூன்று சமூக மக்களும் அமைதியோடு, சமத்துவத்தோடு, வேற்றுமை இன்றி வாழ வேண்டுமான அரசு விரும்புகிறது. அதற்கான அனைத்து விதமான நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக தான் இன்று சமத்துவ பொங்கல் வைத்து வழிபாடு செய்யப்பட்டது. வேங்கைவயல் குடிநீர் மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் மனிதக் கழிவை கலந்த குற்றவாளிகளை கைது செய்ய சிபிசிஐடி போலீசார் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். விரைவில் அவர்கள் கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள்” என்று தெரிவித்தார்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com