சுதந்திர போராட்டத்தில் பெரும் பங்காற்றிய வீரமங்கை வேலுநாச்சியாரின் நினைவாக, நாட்டியம் மற்றும் நாடகம் அரங்கேற்ற நிகழ்வு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஏற்பாட்டில் சென்னையில் நடைபெற்றது.
அரசியல் சார்பற்று நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன், கொங்கு இளைஞர் பேரவைத் தலைவர் தனியரசு, நடிகர்கள் நாசர், விஷால், விவேக், நடிகை கஸ்தூரி, உள்ளிட்ட பிரபலங்கள் பங்கேற்றனர். உணர்ச்சிபூர்வமாக நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய வைகோ, வேலுநாச்சியார் வாழ்க்கை வரலாறை திரைத்துறையினர் திரைப்படமாக எடுக்க முன்வர வேண்டும் என கோரிக்கை விடுத்தார். பார்வையாளர்களுக்கு வேலுநாச்சியார் நினைவு நாட்டிய நிகழ்ச்சி கண்கவர் விருந்தாக அமைந்திருந்தது.
வைகோவின் கோரிக்கையை ஆமோதிக்கும் வகையில் பேசிய திரைத்துறையினர், வேலுநாச்சியாரின் வரலாற்றை பதிவு செய்யும் வகையில், தற்போது திரைப்படம் எடுக்க வேண்டிய அவசியம் உள்ளதாக பேசினர். நிகழ்ச்சி முடிந்து செய்தியாளர்களை சந்தித்த வைகோ, கேளிக்கை வரியை தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும் என்றும், ஹஜ் மானியம் ரத்தானதை ஏற்க முடியாது எனவும் தெரிவித்தார்.