“சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு என்பது வதந்தி” - அமைச்சர் வேலுமணி

“சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு என்பது வதந்தி” - அமைச்சர் வேலுமணி
 “சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு என்பது வதந்தி” - அமைச்சர் வேலுமணி
Published on

சென்னையில் பெருமளவு குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என்று வதந்தி கிளப்பியுள்ளதாக அமைச்சர் வெலுமணி தெரிவித்துள்ளார். 

சென்னையில் கடுமையான தண்ணீர் பிரச்னை ஏற்பட்டுள்ளது. சாலையெங்கும் மக்கள் குடங்களுடன் தண்ணீருக்காக அலைகின்றனர். இதனால் பல்வேறு இடங்களில் அவ்வபோது போராட்டங்களும் நடைபெறுகிறது. தண்ணீர் இல்லாததால் ஓட்டல்கள் இழுத்து மூடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. பல்வேறு ஐடி கம்பெனிகளில் வீட்டில் இருந்தே வேலை செய்ய பணியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

மே மாதத்தை கடந்து ஜூன் மாதமாகியும் இன்னும் மழை சென்னையை எட்டிப்பார்க்கவில்லை. வெப்பத்தின் தாக்கமே அதிகமாக உள்ளது. ஜூன், ஜூலை மாதங்களில் பெய்யும் மழையினால் எவ்வித மாற்றமும் பெரிதாக நடைபெறாது என வெதர்மென் தரப்பில் இருந்து தகவல் வெளியாகிறது. 

தற்போது குடிநீர் பற்றாக்குறையை போக்க அரசு தரப்பில் இருந்து லாரி மூலம் தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது.9 ஆயிரத்து 100 டிரிப் மூலம் தண்ணீர் கொடுக்கப்பட்டு வருகிறது. பேரூராட்சி, நகராட்சி, கிராம பஞ்சாயத்து என அனைத்து பகுதிகளுக்கும் லாரி சர்வீஸ் மூலம் தண்ணீர் வழங்கப்படுகிறது. 

மழைப்பொழிவு இல்லை என்பது அனைவரும் அறிந்ததே எனவும் எதிர்கட்சிகள் செய்ததை விட தற்போதைய அரசு நன்றாகவே செயல்பட்டு வருகிறது எனவும் அமைச்சர் வேலுமணி ஏற்கனவே தெரிவித்திருந்தார். 

இந்நிலையில் சென்னையில் பெருமளவு குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என்று வதந்தி கிளப்பியுள்ளதாக அமைச்சர் வெலுமணி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் பேசுகையில், “ஓட்டல்களில் தண்ணீர் தட்டுப்பாட்டை சமாளிக்க பாக்குமட்டை பிளேட் பயன்படுத்த அறிவுறுத்தியுள்ளோம். சென்னையில் 525 மில்லியன் லிட்டர் தண்ணீர் நவம்பர் மாதம் வரை வழங்க உள்ளாட்சி துறை நடவடிக்கை எடுத்துள்ளோம். மண்டல வாரியக குடிநீர் விநியோகம் தொடர்பாக தலைமை பொறியாளர் உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும். சென்னையில் பெருமளவு குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என வதந்தி கிளப்பியுள்ளனர். இதில் உண்மையில்லை. மழை இல்லாமல் போனது இயற்கையானது. சென்னையில் இரண்டு இடத்தில் கழிவு நீர் சுத்திகரிப்பு செய்து 90 மில்லியன் லிட்டர் தண்ணீர் தொழிற்சாலைக்கு வழங்க நடவடிக்கை எடுத்துள்ளோம்” எனத் தெரிவித்தார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com