விருத்தாசலம் கிளைச் சிறையில் உயிரிழந்த செல்வமுருகனின் வழக்கில், தமிழக டிஜிபி, சிபிசிஐடி உள்ளிட்டோர் நியாயமான முறையில் விசாரணை நடத்தி உண்மையை வெளிக்கொண்டு வர வேண்டும் என தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் கேட்டுக்கொண்டுள்ளார்.
சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் பேசிய அவர், உயிரிழந்த செல்வமுருகனுக்கும், காவல் ஆய்வாளர் ஆறுமுகத்துக்கும் அக்டோபர் 8 ஆம் தேதியே தகராறு ஏற்பட்டுள்ளது என்றும் திருட்டு வழக்கில் குற்றவாளிகளை கண்டறியாத காவல்துறை, செல்வமுருகனை பலிகடாக ஆக்கியுள்ளதாகவும் குற்றஞ்சாட்டினார்.
இதே போன்று, செல்வமுருகனிடம் நெடுஞ்சாலை ஒப்பந்ததாரர் தகராறில் ஈடுபட்டதாகவும், அவரை காப்பாற்றவே, இந்த விஷயத்தில் முதலமைச்சர் மவுனம் காப்பதாகவும் வேல்முருகன் கூறினார். செல்வமுருகனின் உயிரிழப்புக்கு நீதி கிடைக்காவிட்டால், முதல்வரின் வீட்டின் முன்பு போராட்டம் நடத்தப்படும் எனவும் வேல்முருகன் தெரிவித்தார்.