வேலூர் மாவட்டத்தில் காவல் நிலையங்கள் முன் தற்கொலை முயற்சியில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணன் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
வேலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பொதுமக்கள் தங்களுக்கு ஏற்படும் பிரச்சினைகள் குறித்த புகார்களுக்கு சம்பந்தப்பட்ட துறையின் மூலம் உரிய முறையில் தீர்வு கிடைக்கவில்லை எனில் காவல் நிலையங்கள் முன் தற்கொலை முயற்சியில் ஈடுபடும் சம்பவங்கள் தொடர்கதையாகி உள்ளது. இதையடுத்து அம்மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணன் இது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளார்.
“பொதுமக்கள் தங்களுக்கு ஏற்படும் பிரச்சினைகள் குறித்த புகார்களுக்கு சம்பந்தப்பட்ட துறையின் மூலம் உரிய முறையில் தீர்வு கிடைக்கவில்லை எனில் அந்தந்த துறையின் உயர் அதிகாரிகளிடம் நேரடியாக முறையிட்டு அதற்கு உண்டான தீர்வினை காண வேண்டும். அதை விடுத்து இவ்வுலகில் விலை மதிப்பற்றதாக போற்றப்படும் மனித உயிர்களை போக்கிக்கொள்ளும் நோக்கில் அரசுக் கட்டிடங்களின் வளாகத்தின் உள்ளேயும், காவல் நிலையங்களின் முன்பும் தங்களின் இன்னுயிரை மாய்த்துக் கொள்ள முயற்சிப்பது சரியான தீர்வாகாது.
மேலும் அவ்வாறான செயல்களில் ஈடுபடுவது சட்டப்படி குற்றமாகும். இனிவரும் காலங்களில் மாவட்டத்தில் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோர் யாராகினும் அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணன் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.