வேலூர்: விபத்தில் சிக்கியவரின் தலையில் இருந்த இரும்பு நட்டை அகற்றாமல் தையல் போட்ட அரசு மருத்துவர்கள்
திருப்பத்தூர் மாவட்டம் உதயேந்திரம் பகுதியைச் சேர்ந்த கார்த்திகேயன் என்பவர், நேற்று காலை லாரியொன்றை ஓட்டிச் சென்றுள்ளார். அப்போது, பின்னால் வந்த தனியார் பேருந்து லாரியில் மோதியுள்ளது. இந்த விபத்தில், தலையில் பலத்த காயமடைந்த கார்த்திகேயன் வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு தலையில் தையல் போடப்பட்ட நிலையில், ரத்தம் வழிந்தது நிற்கவில்லை. இதனால் அதிருப்தி அடைந்த உறவினர்கள் கார்த்திகேயனை அங்கிருந்து டிஸ்சார்ஜ் செய்து வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு மருத்துவர்கள் ஸ்கேன் செய்ததில், தலையில் இரும்பு நட்டு ஒன்று இருந்தது தெரியவந்துள்ளது.
இதையடுத்து தையல் பிரிக்கப்பட்டு தலையில் இருந்த அந்த இரும்பு நட்டை மருத்துவர்கள் அகற்றியுள்ளனர். அரசு மருத்துவர் அலட்சியத்தால் தலையில் நட்டை வைத்து தைத்ததாக உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இந்த விவகாரத்தில் குழு அமைத்து விரிவான விசாரணைக்குப் பிறகு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு கல்லூரி முதல்வர் விளக்கம் அளித்துள்ளார்.