விபத்தில் காயமடைந்த சிறுவன் மற்றும் அவரது தந்தைக்கு துரிதமாக முதலுதவி அளித்த பெண்ணை வேலூர் சரக டிஐஜி பாராட்டினார்.
காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சரவணன். தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வரும் இவர், தனது மகன் நிஷாந்த் (4) உடன் வேலூர் ஆர்.என்.பாளையத்தில் உள்ள உறவினர் வீட்டில் இருந்து காஞ்சிபுரம் நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அவர்கள் பெங்களூர் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது, பின்னால் வந்த வாகனம் சரவணனின் இருசக்கர வாகனத்தின் மீது மோதியுள்ளது.
இதில் தந்தை சரவணன் மகன் நிஷாந்த் ஆகிய இருவரும் நிலை தடுமாறி கீழே விழுந்து படுகாயம் அடைந்துள்ளனர். அப்போது அவ்வழியாக காரில் சென்ற சென்னை பெண் ஐடி ஊழியர் கீதா என்பவர் துரிதமாக செயல்பட்டு இருவருக்கும் முதலுதவி அளித்துள்ளார்.
இந்நிலையில் அந்த வழியாக சென்றுகொண்டிருந்த வேலூர் சரக டிஐஜி முத்துசாமி மற்றும் எஸ்.பி.ராஜேஷ் கண்ணன் ஆகியோர் விபத்தில் படுகாயமடைந்த சிறுவன் மற்றும் அவனது தந்தையை மீட்டு எஸ்பி வாகனத்திலேயே ரத்தினகிரியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அவர்களுடன் சென்ற கீதா சிறுவனை தனது கையில் ஏந்தியவாரு ஓடிச்சென்று மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட இருவருக்கும் தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதையடுத்து விபத்தில் காயமடைந்தவர்களை துரிதமாக மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த கீதாவை, வேலூர் சரக டிஐஜி முத்துசாமி மற்றும் எஸ்.பி ராஜேஷ் கண்ணன் ஆகியோர் பாராட்டினர். இதுபோன்று அனைவரும் விபத்தில் காயமடைபவர்களை காலதாமதமின்றி மீட்டு மருத்துவ சிகிச்சை அளிக்க உதவ வேண்டுமென வேலூர் சரக டிஐஜி முத்துசாமி கேட்டுக் கொண்டுள்ளார்.