வேலூரில் மும்முனை போட்டியல்ல திராவிடத்திற்கும் தமிழ்தேசியத்திற்குமான போட்டி என்று வேலூர் தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் தீபலட்சுமி புதிய தலைமுறைக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார்.
ஆகஸ்ட் 5ஆம் தேதி நடைபெறும் வேலூர் மக்களவை தொகுதி தேர்தலில் அதிமுக சார்பில் ஏ.சி.சண்முகம், திமுக சார்பில் கதிர் ஆனந்த் மற்றும் நாம் தமிழர் கட்சியில் தீபலட்சுமி ஆகியோர் போட்டியிடுகின்றனர். இந்நிலையில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் தீபலட்சுமி புதியதலைமுறைக்கு அளித்த பேட்டியில். “கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது எங்களுக்கு விவசாயி சின்னம் தாமதமாக வழங்கப்பட்டது. அதுவும் வாக்குப்பதிவு இயந்திரத்தில் தெளிவாக அச்சிடாததால் பலர் குழப்பத்திற்கு ஆளானார்கள். ஆகவே இந்த முறையாவது தேர்தல் ஆணையம் எங்கள் சின்னத்தை தெளிவாக அச்சிட வேண்டும். வேலூர் மக்களவை தொகுதியில் மும்முனை போட்டி என கூறுகிறார்கள். இங்கு மும்முனை போட்டியே இல்லை. இதை திராவிட கட்சிகளுக்கும் தமிழ் தேசியத்திர்க்கும் நடக்கும் 2 முனை போட்டியாகத் தான் பார்க்கிறோம்” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், “ஒரு பெண் வேட்பாளரான நானே மக்களை நேரடியாக சென்று சந்தித்து பணம் கொடுக்காமல் வாக்கு கேட்டு வருகிறேன். ஆனால் 2 ஆண் வேட்பாளர்களுமான, 50 ஆண்டுகால திமுக, 30 ஆண்டுக்கால அதிமுக என கூறிக்கொள்பவர்களும், அவர்களின் சாதனைகளை சொல்லி ஓட்டு கேட்க முடியாமல் காசு கொடுத்து ஏமாற்றி ஓட்டு வாங்க நினைக்கிறார்கள்” என்று கூறினார்.