வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தின் ஆண்டு பெருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது.
நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் உள்ள புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில், சிறப்பு பிரார்த்தனைகளுக்குப் பிறகு, தஞ்சை மறை மாவட்ட ஆயர் சகாயராஜ், கொடியேற்றி வைத்தார். கொடி மெல்ல மெல்ல காற்றில் அசைந்தபடி, கொடிமர உச்சியை அடைந்ததும் பக்தர்கள் மரியே வாழ்க என சரண கோஷம் எழுப்பினர்.
வாணவேடிக்கையுடன் பேராலயத்தில் மின் விளக்குகள் ஒன்றுசேர ஒளிர்ந்தது, அங்கிருந்தவர்களின் கண்களுக்கு விருந்தாக அமைந்தது. இந்த விழாவில், நாகை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமின்றி, பல்வேறு மாவட்டங்களில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் கலந்துகொண்டனர். விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேர் பவனி செப்டம்பர் 7 ஆம் தேதி நடைபெறுகிறது.
இதேபோல், சின்ன வேளாங்கண்ணி என அழைக்கப்படும் சென்னை பெசன்ட் நகரில் உள்ள புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்தில், 52ஆவது ஆண்டு விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
சென்னை மயிலை உயர் மறைமாவட்ட பேராயர் ஜார்ஜ் அந்தோணிசாமி விழாவில் தலைமை வகித்து, 72 அடி உயர வெண்கல கொடிக்கம்பத்தில் கொடியை ஏற்றிவைத்தார். அதன்பின், சிறப்பு கூட்டு திருப்பலி நடைபெற்றது. கொடியேற்ற விழாவில் பக்தர்கள் கூட்டம் அலைமோதிய நிலையில், பாதுகாப்பு பணிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவலர்கள் ஈடுபட்டனர்.