சென்னை கோயம்பேடு சந்தையில் காய்கறிகளின் விலை 60 சதவிகிதம் வரை குறைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
சென்னை கோயம்பேடு சந்தைக்கு நாள்தோறும் 280 லாரிகளில் காய்கறிகள் வந்த நிலையில், தற்போது கூடுலாக 70 லாரிகளில் காய்கறிகள் வருவதாக் கூறுகின்றனர். கடந்த மாதத்துடன் ஒப்பிடுகையில், சின்ன வெங்காயம், பீன்ஸ், அவரை, தக்காளி உள்ளிட்ட காய்கறிகளின் விலை கணிசமாகக் குறைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
கடந்த மாதத்தில் ஒரு கிலோ 120 ரூபாயாக இருந்த சின்ன வெங்காயம் தற்போது 30 ரூபாய்க்கும், 60 ரூபாய்க்கு விற்ற பீன்ஸ், கேரட் உள்ளிட்ட காய்கறிகள் 15 ரூபாய்க்கும் விற்பதாகக் கூறுகின்றனர். கடந்த மாதங்களில் 50 ரூபாய் வரை விற்ற தக்காளி தற்போது ஒரு கிலோ 8 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. சந்தைக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து மட்டுமல்லாமல், ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களிலிருந்தும் காய்கறிகள் வரத்து அதிகரித்துள்ளதால் விலை குறைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.