“புதிய தலைமுறையின் வீட்டுக்கு ஒரு விஞ்ஞானி நிகழ்ச்சியால் புதிய விஞ்ஞானிகள் உருவாவார்கள்” என்று ரோவர் கல்வி நிறுவனத்தின் துணை தலைவர் ஜான் அசோக் வராத ராஜன் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
புதிய தலைமுறையின் வீட்டுக்கு ஒரு விஞ்ஞானி நிகழ்ச்சி பதினோராவது ஆண்டாக பல்வேறு மாவட்டங்களில் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் பெரம்பலூர் மாவட்டத்தில், புதிய தலைமுறை மற்றும் ரோவர் கல்வி நிறுவனங்கள் இணைத்து நடத்திய வீட்டுக்கு ஒரு விஞ்ஞானி நிகழ்ச்சி நேற்று (04.09.2024) நடத்தப்பட்டது. இதில் அந்த மாவட்டத்தை சேர்ந்த 30 க்கும் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் இருந்து 300 க்கும் மாணவர்கள் பங்கேற்று 150 க்கும் மேற்பட்ட கண்டுபிடிப்புகளை காட்சிப்படுத்தினர்.
நிகழ்ச்சியை ரோவர் கல்வி குழுமத்தின் துணை தலைவரும் ஹான்ஸ் ரோவர் பப்ளிக் பள்ளியின் தாளாளருமான ஜான் அசோக் வராத ராஜன் துவக்கி வைத்தார். தொடர்ந்து பள்ளி மாணாக்கர்களின் கண்டுபிடிப்புகளை பார்வையிட்டு விளக்கங்களும் கேட்டறிந்தார்.
பின்னர் மாலையில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் இளநிலை பிரிவில் தந்தை ரோவர் மெட்ரிக் பள்ளி மாணவிகள் R.V. சுபிக்க்ஷா மற்றும் M. தனுஷ்கா இணை முதல் பரிசினை வென்றனர்.
முதுநிலை பிரிவில் செயின்ட் ஜோசப் மெட்ரிக் பள்ளி மாணவர்கள் E. அதியரசன் மற்றும் V. சந்தோஷ் பாரதி முதல் பரிசினை வென்றனர்.
நிகழ்வில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணாக்கர்களுக்கு சான்றிதழ்களும், கோப்பைகளும், பதக்கங்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டது. பங்கேற்ற அணைத்து மாணாக்கர்களுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.