30 ஆண்டுகளாக சிறைத் தண்டனை: ஆளுநர் ஒப்புதலையடுத்து வீரப்பனின் கூட்டாளிகள் 2 பேர் விடுதலை
30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் தண்டனை அனுபவித்து வந்த சந்தன கடத்தல் வீரப்பனின் கூட்டாளிகள் இருவர் கோவை மத்திய சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளனர்,
சத்தியமங்கலம் வனப்பகுதியில் கடந்த 1987-ம் ஆண்டு வனச்சரகர் சிதம்பரம் என்பவர் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் சந்தன கடத்தல் வீரப்பனின் அண்ணன் மாதையன், ஈரோடு மாவட்டதை சேர்ந்த பெருமாள், சேலம் மாவட்டத்தை சார்ந்த ஆண்டியப்பன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். ஈரோடு நீதிமன்றத்தில் 3 பேருக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. மூவரும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில் வீரப்பனின் அண்ணன் மாதையன் கடந்த வருடம் உடல் நலக் குறைவால் உயிரிழந்தார். மற்ற இருவரும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
மாதையன் உயிரிழந்த நிலையில், பெருமாள், ஆண்டியப்பனை விடுவிக்க மனித உரிமை ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். சமூக ஆர்வலர்களின் கோரிக்கையை ஏற்று 30 ஆண்டுகளாக சிறையில் உள்ள ஆண்டியப்பன், பெருமாள் ஆகிய இருவரையும் விடுதலை செய்ய ஆளுநருக்கு தமிழக அரசு பரிந்துரைத்தது. தற்போது ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளதால் அவர்கள் இருவரும் கோவை சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.