மதுரை பேருந்து நிலையத்தை கோபுரம் வடிவில் அமைத்தால் கடும் போராட்டம் நடத்தப்படும் என திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் 159 கோடி ரூபாய் மதிப்பில் மதுரை மீனாட்சியம்மன் கோவிலை மையமாக வைத்து நகரை நவீனப்படுத்தும் பணிகள் துவங்கி நடைபெற்று வருகிறது. மதுரை ஸ்மார்ட் சிட்டி மாதிரி வடிவத்தில் பெரியார் பேருந்து நிலையத்தின் முகப்புப் பகுதி கோபுரம் போன்ற அமைப்பில் உள்ளதாக புகார் எழுந்தது. அதற்கு பல தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இது குறித்து கருத்து தெரிவித்த கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ, அதிமுக மதச்சார்பற்ற கட்சி என்றும், ஆனாலும் கோவில் நகரமான மதுரையில் கோபுரம் போன்ற முகப்பு கொண்ட பேருந்து நிலையம் அமைப்பதில் என்ன தவறு எனவும் கேள்வி எழுப்பினார்.
இந்நிலையில் இந்துத்துவாவை திணிக்கும் திட்டத்தில் பேருந்து நிலைய முகப்பு வடிவமைக்கப்படவில்லை என மதுரை மாநகராட்சி முதன்மை பொறியாளர் விளக்கமளித்துள்ளார். பழைய மாதிரி வடிவமைப்பை பார்த்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது என்றும், திராவிட கட்டிடக் கலையின் அடிப்படையில் பேருந்து நிலைய முகப்பு அமைக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.
இது தொடர்பாக திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில், பெரியாரை கொச்சைப் படுத்தும் வகையில் பேருந்து நிலையத்தை கோபுரம் மாதிரி வடிவமைக்கும் முயற்சியை அதிமுக அரசு கைவிட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். இல்லை என்றால் மதச்சார்பற்ற சக்திகளை ஒருங்கிணைத்து கடும் போராட்டம் நடத்தப்படும் என்றும் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.