சேலத்தில் ஒரே இடத்தில் 23 வீணைகளை மீட்டும் வீணை இசை சங்கம் சாதனை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், 11 நிமிடத்தில் மோகன ராகம்; வாசித்து நோபல் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தனர்.
சேலம் மாநகரில் உள்ள குகை பகுதியில் குழந்தைகள் தினவிழா கொண்டாட்டம் நடைபெற்றது. ஸ்ரீ மாயி வீணை இசை பயிலகம் மற்றும் நோபல் உலக சாதனை புத்தகம் ஆகியவை இணைந்து ஒரே இடத்தில் 23 மாணவிகள் வீணைகள் மீட்டும் வீணை இசை சங்கம நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
தற்போதைய காலத்தில் வீணை இசை என்பது அழியும் நிலையில் உள்ளது. வீணை வாசிப்பதிலும், அந்த இசையை ரசிப்பதிலும் மக்களுக்கான ஆர்வமின்மை அதிகரித்துவிட்டது. மிக வேகமான உலகத்தில் அதிரடி இசையை ரசிக்கும் நிலையே தற்போது நிலவி வருகிறது. ஆனால், மனதை வருடி, ஒரு ஆழமான நிம்மதியை, அமைதியை மனதிற்கு கொடுக்கும் ஆற்றல் வீணை இசைக்கு மட்டுமே உள்ளது.
நவீன உலகில் அழிந்து வரும் வீணை இசையை மீட்டெடுக்கும் முயற்சியாக ஸ்ரீ மாயி வீணை இசை பயிலகம் பெண்களுக்கு வீணை இசையை போதித்து பயிற்சி அளித்து வருகிறது. இந்த நிலையில், இந்த இசையை மீண்டும் மக்களிடம் கொண்டு சேர்க்கும் விதமாக, நோபல் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெறும் வகையில் ஒரே இடத்தில் 23 மாணவிகள் கலந்துகொண்டு வீணையை மீட்டி இசை சங்கம நிகழ்ச்சியை நடத்தினர்.
இதில், ஒரே நேரத்தில் 23 மாணவிகளும் 11 நிமிடத்தில் மோகனம் ராகம் வாசித்து சாதனை படைத்தனர். இந்த வீணை இசை நிகழ்ச்சியில் ஏராளமான இசை ஆர்வலர்கள், பொதுமக்கள் பலரும் கலந்துகொண்டு ரசித்து மகிழ்ந்தனர். வீணை இசையில் புதிய சாதனை படைத்த மாணவிகளுக்கு பரிசுகள் சான்றுகள் வழங்கப்பட்டது. தொடர்ந்து வீணை இசையை மக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில் பல்வேறு நிகழ்சிகள் நடத்தப்படும் என்று ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.