வேதாரண்யம் பகுதியில் தொடர் பெய்யும் பருவ மழையால் 5 ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்ட சம்பா, தாளடி நெற்பயிர்கள் இரண்டாம் முறையாக மழைநீரில் மூழ்கி பாதிக்கப்பட்டுள்ளன.
நாகை மாவட்டம் வேதாரண்யம் தலைஞாயிறு மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் பரவலாக விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இந்த தொடர் மழையால் தாழ்வான பகுதிகளில் இரண்டாவது தடவையாக விவசாய விளை நிலங்களை மழை நீர் சூழ்ந்து நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
இதில், மணக்காடு, மருதூர், அண்டகத்துறை, பிராந்தியங்கரை புல்வெளி, கரியாப்பட்டினம் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் மழைநீர் வடிய வசதி இல்லாததால் 5 ஆயிரம் ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டுள்ள சம்பா தாளடி நெற்பயிர்கள் முற்றிலும்; மழை நீரில் முழ்கியுள்ளன.
இதனால் கவலையடைந்த விவசாயிகள், பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை வேளாண்மைத் துறையினர் நேரில் பார்வையிட்டு ஏக்கருக்கு ரூ. 25 ஆயிரம் நிவாரண உதவி வழங்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.