ஸ்டெர்லைட் ஆலையை இயக்க அனுமதி தந்தது ஏமாற்றமே - பூவுலகின் நண்பர்கள்

ஸ்டெர்லைட் ஆலையை இயக்க அனுமதி தந்தது ஏமாற்றமே - பூவுலகின் நண்பர்கள்
ஸ்டெர்லைட் ஆலையை இயக்க அனுமதி தந்தது ஏமாற்றமே - பூவுலகின் நண்பர்கள்
Published on

ஸ்டெர்லை ஆலையை இயக்க அனுமதி அளித்தது ஏமாற்றமே என்று பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் சுந்தர்ராஜன் கூறியுள்ளார். 

ஆலை மீண்டும் இயங்க தடையில்லை என்றும் மூன்று வாரத்திற்குள் ஆலை இயங்க தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவிப்பாணை வெளியிடவும் பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. ஆலைக்கு உடனடியாக மின்சாரம் வழங்கவும் ஆணையிடப்பட்டுள்ளது. இதேபோல் ஸ்டெர்லைட் ஆலைக்கும் சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. ஆலைக்கு எதிராக தமிழக அரசு முன்வைத்த வாதங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தொடரப்பட்ட மனுக்களை தேசிய பசுமைத் தீர்ப்பாயம் தள்ளுபடி செய்துள்ளது.

இந்நிலையில், தமிழக அரசு பிறப்பித்த அரசாணைக் குறித்த விவகாரம், தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் விசாரணை வரம்புக்கு உட்பட்டதா என பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த சுந்தர்ராஜன் கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக புதியதலைமுறைக்குப் பேட்டியளித்த அவர், பசுமை தீர்ப்பாயத்தின் இந்த உத்தரவு ஏமாற்றம் அளிப்பதாக கூறியுள்ளார். 

மேலும், “தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை தேசிய பசுமை தீர்ப்பாயம் விசாரிக்க முடியுமா என்பதே தெரியவில்லை. பல ஆண்டுகளாக சுற்றுச் சூழல் கழிவுகளை அகற்றவில்லை, நிறைய விஷயங்களுக்கு அனுமதி வாங்கவில்லை என்பது உள்ளிட்டவை குழுவின் அறிக்கையிலேயே உள்ளது. அப்படி இருக்கையில், ஆலையை இயக்க அனுமதி அளித்துள்ளது அதிருப்தி அளிக்கிறது” என்று அவர் கூறினார்.

இதனிடையே, ஸ்டெர்லைட் விவகாரத்தை தேசிய பசுமைத் தீர்ப்பாயம், அறிவியல் ரீதியாக அணுகி இருப்பதாக அந்நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் சுமதி தெரிவித்துள்ளார். புதிய தலைமுறைக்கு தொலைபேசி வாயிலாக பேட்டியளித்த அவர், மக்கள் ஆதரவோடு ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் இயக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார். 

மேலும், ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் அனுமதி அளித்தது கண்டிக்கத்தக்கது என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். ஆலையை மூட வலியுறுத்தி மீண்டும் போராட்டத்தில் ஈடுபட வேண்டிய நிலைக்கு மக்கள் தள்ளப்படுகிறார்கள் என்றும் அவர் கூறினார். 

இதனிடையே, தீர்ப்பாயம் உத்தரவிட்டாலும் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட மக்களை திரட்டுவோம் என்று சுற்றுச் சூழல் பாதுகாப்பு இயக்கத்தின் முகிலன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து புதிய தலைமுறைக்கு அவர் அளித்த பேட்டியில், “பசுமை தீர்ப்பாய ஆணை இப்படித்தான் வரும் என்று தெரியும், மக்கள் பாதிப்பு குறித்து அரசு பேசுவதில்லை. அரசியல் கட்சிகள் தொடர்ந்து போராட வேண்டும், மக்களுடன் இணைந்து போராட வேண்டும். மக்கள் போராட்டத்தின் மூலம்தான் ஸ்டெர்லைட் ஆலையை மூட முடியும் என நம்புகிறோம்” என்றார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com