தமிழகத்தில் இரண்டு இரண்டங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க வேதாந்தா நிறுவனத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
நாட்டிலுள்ள 55 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க மற்றும் ஆய்வு செய்ய மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் அனுமதி அளித்துள்ளார். மொத்தம் 6 நிறுவனங்களுக்கு இந்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதில், கடற்பகுதி, நிலப்பரப்பு என 41 இடங்களில் வேதந்தா நிறுவனத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. வேதாந்தாவுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள 41 இடங்களில் இரண்டு காவிரி கடல் பகுதியில் வருபவை. ஓஎன்ஜிசி நிறுவனத்திற்கு இரண்டு இடங்களில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஓஎன்ஜிசிக்கு ஒதுக்கப்பட்டுள்ள இடம் மட்டும் நிலப்பகுதியில் வருகிறது.
தமிழகத்தில் காவிரி படுகை கடற்பகுதியின் 2 இடங்களில்தான் வேதாந்தா நிறுவனம் ஹைட்ரோகார்பன் எடுக்கும் என்பதால் பிரச்னை வராது என மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியுள்ளார்.
இது குறித்து வேதாந்தா குழுமத் தலைவர் அனில் அகர்வால், “நாட்டில் ஹைட்ரோ கார்பனின் பங்களிப்பு முக்கியமானது. அரசு இதில் சிறப்பான பங்களிப்பு செலுத்தி வருகிறது. இதன் முக்கியத்துவத்தை பலரும் அறிந்திருக்கவில்லை. பலரும் எதிர்த்து வருகிறார்கள். ஸ்டெர்லைட் ஆலை மிக விரைவில் திறக்கப்படும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது” என்றார்.