இதுதான் ஜெயலலிதாவின் வேதா நிலையம் சீக்ரெட்!

இதுதான் ஜெயலலிதாவின் வேதா நிலையம் சீக்ரெட்!
இதுதான் ஜெயலலிதாவின் வேதா நிலையம் சீக்ரெட்!
Published on

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்ந்த வேதா நிலையம் வீடு நினைவிடமாக மாற்றப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கு பல்வேறு தரப்பினர் வரவேற்பு தெரிவித்துள்ள நிலையில், வேதா இல்லத்தின் சிறப்பு பற்றி தெரிந்துகொள்ளலாம்.

எம்ஜிஆர் உள்ளிட்ட முன்னணி கதாநாயகர்களுடன் ஜெயலலிதா நடிக்கத் தொடங்கிய 2 ஆண்டுகளுக்குப் பின், போயஸ் கார்டனில் உள்ள இடத்தை, ஜெயலலிதாவும், அவரது தாயார் சந்தியாவும் இணைந்து 1967-ஆம் ஆண்டில் வாங்கினர். அப்போது இதன் மதிப்பு ரூ.1.32 லட்சம். அந்த இடத்தில் வீடு கட்டி, தனது பெற்றோரின் நினைவாக, வேதா நிலையம் என பெயர் சூட்டினார் ஜெயலலிதா. அதன் பின் செல்வாக்குமிக்கத் தலைவராக ஜெயலலிதா உருவெடுத்ததும் அந்த வீட்டில் இருந்து தான். 

எம்ஜிஆருக்கு பிறகு அதிமுகவின் நிரந்தர பொதுச் செயலாளர் பதவியை பிடித்த ஜெயலலிதா, அரசியல் முதல் தனிப்பட்ட வாழ்க்கை வரையில் வேதா இல்லத்தில் இருந்தபடி தான் முக்கிய முடிவுகளை எடுத்து வந்துள்ளார். பிரதமர் மோடி உள்பட பல அரசியல் தலைவர்களை சந்தித்ததும் வேதா இல்லத்தில் தான்.  24 ஆயிரம் சதுர அடி பரப்பளவு கொண்ட அந்த வீட்டின் தற்போதைய மதிப்பு 90 கோடி ரூபாய் எனக் கூறப்படுகிறது. ஜெயலலிதா புத்தகம் வாசிக்கும் பழக்கம் உடையவர் என்பதால், வேதா இல்லத்துக்குள் தனியாக நூலகமே அமைக்கப்பட்டுள்ளது.

ஜெயலலிதாவின் வாரிசுகள் முட்டுக்கட்டைப் போட்டாலும், நினைவிடமாக்கப்படுவதை தடுக்க முடியாது என்கின்றனர் சட்ட வல்லுநர்கள்‌. ஏனெனில் வேதா இல்லத்தின் தற்போதைய மதிப்பான 90 கோடி ரூபாய்க்கு ஈடாக இழப்பீடு கொடுத்து, அரசால் அதை நினைவிடமாக்க முடியும் என்றும் அவர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், “ஜெயலலிதா வாழ்ந்த இல்லத்தை நினைவிடமாக்க வேண்டும் என்ற பலதரப்பு மக்களின் கோரிக்கையை ஏற்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அது நினைவிடமாக மாற்றப்படும் என அறிவித்துள்ளார். சட்டரீதியாக அந்த இல்லத்திற்கு யார் உரிமையாளரோ அவர்களுக்கு உரிய இழப்பீடு தந்து நினைவிடமாக மாற்றுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என்று கூறினார்.

ஜெயலலிதாவின் தாயார் சந்தியா பெயரில் உள்ள சொத்து ஜெயலலிதாவுக்கும், அவரின் அண்ணன் ஜெயக்குமாருக்கும் சேரும். ஜெயக்குமார் உயிரோடு இல்லாத நிலையில் அவரது மகன் தீபக் மற்றும் மகள் தீபாவுக்கு பாதி சொத்துகள் சேரும். மீதி சொத்துகளை யாருக்கு எழுதி வைக்க முடியும். இழப்பீடு கொடுத்தாலும் யாருக்கு எழுதி வைக்க முடியும் என்ற குழப்பம் தொடர்ந்து நீடிக்கிறது என்று சட்டதரணிகள் கூறுகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com