சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்தப் பிறகு செய்தியாளரை சந்தித்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், “தாழ்த்தப்பட்ட மக்களுக்காக போராடிய கடலூர் மாவட்டத்தை சேர்ந்த இளைய பெருமாளுக்கு நினைவரங்கம் ஒன்று சிதம்பரம் நகரில் அமைக்கப்படும் என்று நேற்று முதல்வர் அறிவித்திருக்கிறார். இதையடுத்து கோரிக்கை நிறைவேற்றப்பட்டிருக்கிறது என்கிற அடிப்படையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் முதல்வரை சந்தித்து எமது நன்றியை தெரிவித்து இருக்கிறோம்.
பெரியவர் இளைய பெருமாள், ஜவஹர்லால் நேருவின் காலத்தில் இருந்து தேசிய அளவில் அரசியலில் ஈடுபாடு கொண்டவர்; தேசிய அளவில் ஒடுக்கப்பட்ட மக்களின், பழங்குடி மக்களின் வாழ்நிலைகளை ஆராய்ந்து ஒன்றிய அரசுக்கு அறிக்கை அளித்தவர்; அவருடைய பெயரிலேயே இளைய பெருமாள் கமிட்டி நிறுவப்பட்டது.
அந்த பரிந்துரைகளின் அடிப்படையில் தான் வன்கொடுமை தடுப்பு சட்டம் நிறைவேற்றப்பட்டது. இன்றைக்கும் அகில இந்திய அளவில் ஒடுக்கப்பட்ட பழங்குடியினரின் பாதுகாப்புக்கு, அவர்களின் நலன்களின் மீதான அரசின் திட்டங்களுக்கு, இந்த கமிட்டியின் பரிந்துரை மிகுந்த பயனுள்ளதாக இருக்கிறது.
தேசிய அளவில் இளைய பெருமாள் அவர்களின் பங்களிப்பை போற்றக்கூடிய வகையிலும், தமிழக அளவில் அவர் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காகவும் ஒட்டுமொத்த உழைக்கிற மக்களின் நலன்களுக்காகவும் பாடுபட்டதை போற்றுகிற வகையிலும் இந்த அரங்கம் அமைக்கப்படுகிறது.
ஜூன் 23 இளைய பெருமாள் நூற்றாண்டு வருகிறது; அந்த நூற்றாண்டு விழாவையொட்டி அவருக்கு நூற்றாண்டு நினைவு அரங்கம் அமைப்பதற்கு முதல்வர் அறிவித்திருப்பது, மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது” என்று தெரிவித்தார்.
தொடர்ந்து வேங்கைவயல் விவகாரத்தில் தற்போது வரை குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, “அது குறித்தும் முதலமைச்சரிடம் பேசி இருக்கிறோம். விசாரணை நடைபெற்று வருகிறது. எனினும் அதற்கு குறித்த காலக்கெடு எதுவும் நாம் நிர்ணயிக்க முடியாது” என அவர் கூறினார்.
தொடர்ந்து கேள்வி எழுப்பிய செய்தியாளர் ஒருவர், ‘நீங்கள் தி.மு.க.வினர் போன்று பேசுகிறீர்கள்’ என கேட்க, கோவமடைந்த தொல். திருமாவளவன், பத்திரிகையாளர்கள் நாகரிகமாக கேள்வி கேட்க வேண்டும் எனவும், அநாகரிகமாக கேள்வியை கேட்கக்கூடாது என தெரிவித்தார்.
மேலும் திமுக கூட்டணியிலேயே இருந்தாலும், இதுவரை பத்துக்கும் மேற்பட்ட போராட்டங்கள் அரசை எதிர்த்து நடத்தி இருப்பதாகவும், நாளை கூட போராட்டம் நடத்த உள்ளதாகவும் தொல். திருமாவளவன் கூறினார். தி.மு.க.காரன் போல செயல்படுவதாக கூறுவது அநாகரிகம் என பேசிய அவர், அதற்கு தனது கண்டனத்தை செய்தியாளருக்கு தெரிவித்தார். அத்துடன், பத்திரிகையாளர் சந்திப்பை பாதியில் நிறுத்தி சென்றார்.