சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் நேற்று (ஆக. 16) மாலை 3 மணி அளவில் விசிக தலைவர் தொல்.திருமாவளவனின் 62-வது பிறந்தநாள், விசிக தொண்டர்களால் கொண்டாடப்பட்டது.
இதில் விசிக பொதுச்செயலாளர்கள் ம.சிந்தனைசெல்வன் எம்எல்ஏ, துரை.ரவிக்குமார் எம்.பி., பிற எம்எல்ஏ-க்கள் எஸ்.எஸ்.பாலாஜி, ஆளூர் ஷாநவாஸ், பனையூர் மு.பாபு, திரைப்பட இயக்குநர்கள் ராஜ்கிரண், லட்சுமி ராமகிருஷ்ணன், பட்டிமன்ற பேச்சாளர் நீலவேணி முத்து ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர். விழாவில் மது மற்றும் போதை ஒழிப்பு கருப்பொருளை முன்வைத்து விழிப்புணர்வு நிகழ்ச்சி தொடங்கப்பட்டது.
இவ்விழாவில் பேசிய திருமாவளவன், “போதைப்பொருளால் இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் என அனைவரும் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்” என பேசியுள்ளார்
மேலும், இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், “ஒரு இளைஞன் போதைக்கு அடிமையாகாமல் இருந்திருந்தால் ஆற்றல் வாய்ந்த ஆசிரியராகவோ, எழுத்தாளராகவோ, பொறியாளராகவோ, நீதிபதியாகவோ, வழக்கறிஞராகவோ, மருத்துவராகவோ வளர முடியும். ஆனால், அப்படி ஆக முடியாத அளவிற்கு ஒவ்வொரு கிராமத்திலும் 100க்கணக்கான இளைஞர்கள், இளம் பெண்கள் உட்பட 13-19 வயதில் இருக்க கூடிய பதின்ம வயதினர் பலர் மது போன்ற போதைப்பழக்கத்திற்கு அடிமையாகிறார்கள்.
கஞ்சா, புகையிலை, பான்பராக், கொக்கைன், ஹெராயின், மதுபானம் என பல வகையான போதைப்பொருட்களுக்கு தற்போது சரளமாக புழக்கத்தில் உள்ளது. பெரும்பாலும், ஏழை எளிய மக்கள் வசிக்கும் பகுதிகளில் வெளிப்படையாக வியாபாரம் செய்யப்படுகிறது. பரவுன் சுகர் மிகச்சாதாரணமாக கிடைக்கிறது.
இன்றும் கிராமப்புறங்களுக்கு நாம் சென்றால், 100ல் 20 பேராவது போதைக்கு அடிமையானவர்களாக இருக்கிறார்கள். மிகவும் அடிமையாகி கை,கால்கள் செயலிழந்து இருக்கிறார்கள். இதனால், வாரிசு இல்லாமல் போகிற நிலை இப்போது சமுதாயத்தில் நிலவு வருகிறது. இது மதுப்பழக்கத்திற்கு ஆளானவர்களையும், அவர்களின் குடும்பங்களையும் மட்டும் பாதிக்கவில்லை. ஒட்டுமொத்த தேசத்தையும், மனித வள ஆற்றலையும் சிதைக்கிறது.
எத்தனையோ இளைஞர்கள் சிந்தனையாளர்கள் வருவதற்கு வாய்ப்புள்ளது. புரட்சியாளர் அம்பேத்கர் போல, பெரியார் போல போராளிகள் வளர வாய்ப்புள்ளது. ஆனால், இளைஞர்கள் எல்லாம் இந்த போதைப்பழக்கத்திற்கு அடிமையாகி பாழாகி நாற்பது வயதிற்குள் காலமாகி விடுகிறார்கள். பெற்றப்பிள்ளைகளை நடுத்தெருவில் விட்டு விட்டு போய் விடுகிறார்கள். இது மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்துகிறது.
சாதியை ஒழிக்க முடியுமா, ஊழலை ஒழிக்க முடியுமா என்று கேட்டால் இல்லை என்றுதான் பதில் வரும், ஆனால், அதை ஒழிப்பதற்க்கான களப்பணிகள், போராட்டங்கள் என்று அனைத்தும் முன்னெடுக்கப்பட்டுதான் வருகிறது.
அதேபோல... மது மற்றும் போதைப்பொருள்களால் ஏற்படுகிற பாதிப்பிலிருந்து சிதைந்து வருகின்ற மனித வளத்தை பாதுகாக்க... இது போன்ற விழிப்புணர்வூட்டும் பரப்புரைகள் மேற்கொள்ள வேண்டிய அவசியம் நமக்கு இருக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.