கடந்த மாதம் (அக். 27 ஆம் தேதி) நடந்த தமிழக வெற்றிக் கழகம் மாநாட்டில் தலைமை உரை நிகழ்த்திய அக்கட்சித்தலைவர் விஜய், ’தவெகவோடு சேர்ந்த அரசியல் களம் காணும் கட்சியினருக்கு ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்கு’ என்பது குறித்தான கருத்துக்களை பேசியிருந்தார்.
விஜய்யுடன் சட்டமன்றத் தேர்தலில், விசிகவும் சேர்ந்து களம் காண வாய்ப்புள்ளதா? என்று இணையத்தில் நெட்டிசன்கள் பேசிக்கொள்ளும் அளவிற்கு விஜய்யின் இந்த பேச்சு அரசியல் வட்டாரத்தில் பெரும் புயலையே கிளப்பியது.
இதற்கிடையே தவெக மாநாடு குறித்து பேசியிருந்த விசிக தலைவர் திருமாவளவன், ”அவரது உரையில் அதிகம் திமுக எதிர்ப்பு நெடி வீசுகிறது. அவரது ஒட்டுமொத்த உரையின் சாராம்சமும் திமுக மற்றும் திமுக கூட்டணி கட்சிகளின் அரசியலை எதிர்ப்பதாக இருக்கிறது. பாசிசத்தை எதிர்ப்பவர்களை கேலி செய்யும் வகையில் பேசுகிறார்” என்றெல்லாம் கூறி கடும் விமர்சனத்தை விஜய்க்கு எதிராக முன்னிறுத்தி இருந்தார்.
இந்நிலையில் தவெக விஜய், விசிக திருமாவளவன் ஒரே நிகழ்ச்சியில் பங்கேற்கவிருப்பதாக செய்தி வெளியான நிலையில், மீண்டும் கூட்டணி குறித்த கருத்துகள் வைரலாகின. இதற்கெல்லாம் பதிலளிக்கும் வகையில் திருமாவளவன் விளக்கமளித்துள்ளார்.
கூட்டணி குறித்த வெளியான செய்திகளுக்கெல்லாம் பதிலளிக்கும் வகையில் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், ”கட்சியின் கூட்டணி தொடர்பாக பேசுவதற்கு எந்த தேவையும் எழவில்லை, ஏற்கனவே நாங்கள் திமுக மற்றும் காங்கிரஸ் கூட்டணியில் வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறோம். இந்த இரண்டு கூட்டணியையும் உருவாக்கியதில் விசிகவின் பங்கும் உண்டு. எனவே, நாங்கள் உருவாக்கிய கூட்டணிகளை மேலும் வலுப்படுத்த வேண்டும், முன்னோக்கி எடுத்து செல்லவேண்டும் என் பதில் தான் நோக்கம் இருக்கிறது. ஆகையால் இந்த கூட்டணியை விட்டு வேறொரு கூட்டணிக்கு செல்லவேண்டிய தேவை எங்களுக்கு இல்லை.
ஏற்கனவே, பலமுறை இதுகுறித்து நான் பேசியுள்ளேன், விசிக மீதான நம்பகத்தன்மையை கேள்விக்குள்ளாக்க சிலர் முயன்று வருகின்றனர். இதை நான்முற்றிலுமாக மறுக்கிறேன், விசிக கட்சிக்கு எந்த ஊசலாட்டமும் இல்லை. நாங்கள் எடுத்த நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறோம்.
மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியை உருவாக்கியதில் எங்களுடைய பங்கு உண்டு, அது எங்கள் கூட்டணி. அதுபோல இந்திய கூட்டணியை உருவாக்கியதில் எனக்கும் பங்கு உண்டு. இந்த கூட்டணிகளை சிதறடிக்கவேண்டிய தேவை எங்கிருந்து எழுந்தது. விசிக 2026 பொதுத்தேர்தலில் திமுக கூட்டணியில் தான் இடம்பெறும் என 100% உறுதியுடன் கூறுகிறேன்” என்று திட்டவட்டமாக தெரிவித்தார்.