செய்தியாளர்: ராஜ்குமார்
தமிழகத்தில் விசிக, சிதம்பரம் மற்றும் விழுப்புரம் தொகுதிகளில் போட்டியிடுகிறது. அதேபோல் ஆந்திரா, கர்நாடக உள்ளிட்ட ஐந்து மாநிலங்களிலும் போட்டியிடுகின்றனர். ஏற்கனவே கடந்த இரண்டு தேர்தல்களில் போட்டியிட்ட பானை சின்னத்தை இந்த முறையும் ஒதுக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் மனு அளித்திருந்தனர். ஆனால் ஒரு சதவீதம் வாக்குகள் பெறவில்லை எனக் கூறி தேர்தல் ஆணையம், பானை சின்னத்தை ஒதுக்க முடியாது என நேற்றிரவு பதில் அளித்திருந்தது.
இந்நிலையில் விசிக தற்போது டெல்லி தேர்தல் ஆணையத்தில் மேல்முறையீடு செய்திருக்கிறது. அதில் “ஆந்திராவில் ஒரு சதவீதம் வாக்குகள் இல்லை என்று கூறுகின்றனர். தமிழகத்தில் 2019 ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு 1.16 சதவீதம் வாக்குகளை பெற்றிருக்கிறோம். 2021 சட்டமன்றத் தேர்தலில் ஆறு இடங்களில் போட்டியிட்டு நான்கு சட்டமன்ற உறுப்பினர்கள் வெற்றி பெற்று இருக்கிறோம்.
எனவே இந்த விவரங்களை தேர்தல் ஆணையம் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்” என மேல்முறையீடு செய்திருப்பதாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.