விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நடத்தும் மது மற்றும் போதை ஒழிப்பு மகளிர் மாநாடு கள்ளக்குறிச்சி மாவட்ட உளுந்துார்பேட்டையில் இன்று மாலை தொடங்கி நடைபெற்றது. கூட்டணிக் கட்சி சார்பில் பலரும் கலந்துகொண்டனர்.
மாநாட்டின் தொடக்கத்தில் ‘அரசமைப்புச் சட்டம் 47-இல் கூறியபடி மதுவிலக்குச் சட்டத்தை இயற்ற வேண்டும்; மதுவிலக்கை தேசியக் கொள்கையாக அறிவிக்க வேண்டும்’ உள்பட13 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த நிலையில் மது ஒழிப்பு மாநாடு ஏன் என்பது குறித்து அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் உரையாற்றினார்.
அப்போது பேசிய திருமாவளவன், “இளம்வயதில் ஒருவருக்கு மது மற்றும் போதைப் பழக்கம் வந்தால் மனித வளம் அழியும். இதை உணர்த்தவும், மதுவிலக்கை அமல்படுத்தவே நம் மாநாடு நடத்தப்படுகிறது. ஆனால் நம் மது ஒழிப்பு மாநாட்டின் உயர்ந்த நோக்கத்தை சிலர் சிதைத்துவிட்டார்கள். திமுகவை நிறுவிய அண்ணா, மதுவிலக்கு கொள்கையில் உறுதியாக இருந்தார். அனைத்துக் கட்சிகளுக்கும் விடுக்கப்பட்ட அழைப்பிற்கு அரசியல் சாயம் பூசிவிட்டார்கள்” எனப் பேசினார்.
தொடர்ந்து உரையாற்றிய அவர், “காந்தியடிகளின் கொள்கைகளில் நமக்கு விமர்சனங்கள் இருக்கலாம். ஆனால் அவரின் 2 கொள்கையில் நமக்கு உடன்பாடு உண்டு; ஒன்று மதச்சார்பின்மை மற்றொன்று மதுவிலக்கு. காந்தியின் உயிர்மூச்சுக் கொள்கையில் ஒன்று மதுவிலக்கு; அதனால்தான் அவர் பிறந்தநாளில் இந்த மாநாட்டை விசிக நடத்துகிறது.
மது ஒழிப்பு மாநாடு அரசியல் உள்நோக்கம் கொண்டது அல்ல. ‘மதுவிலக்கே ஒற்றை நம் கோரிக்கை‘. இது கவுதம புத்தர் முன்வைத்த முழக்கம். சாதி, மத பெருமையை நாங்கள் பேசக்கூடியவர் அல்ல; பகவான் புத்தரின் பெருமைகளை பேசக்கூடியவர்கள். மதுவிலக்கில் திமுகவுக்கும் கொள்கை அடிப்படையில் உடன்பாடு உள்ளது. மதுவிலக்கை அமல்படுத்தும் மாநிலங்களுக்கு நிதி இழப்பீட்டை வழங்க வேண்டும் என கலைஞர் கருணாநிதி வலியுறுத்தினார்” எனப் பேசினார்.
தொடர்ந்து, ‘மதுவால் இந்துக்களே அதிகம் பாதிக்கப்படுகின்றனர்; பிரதமரும் உள்துறை அமைச்சரும் இந்துக்களை காப்பாற்ற முன்வருவார்களா?’ என்ற கேள்வியை முன்வைத்தார். இப்படியாக இந்த மாநாட்டில் திருமாவளவன் பேசிய கருத்துகளை, கீழ் இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் முழுமையாக பார்க்கலாம்..
மாநாட்டின் முழு காணொளியை பார்க்க...