“விசிகவிற்கும் திமுகவிற்கும் எந்த விரிசலும் இல்லை” - முதலமைச்சரை சந்தித்த பின் திருமாவளவன் பேட்டி!

“எங்கள் கொள்கைகளில் உறுதியாக உள்ளோம். அதனை முன்னிறுத்துகிறோம். இது எல்லாருக்குமான பிரச்னை. ஒரு கட்சிகான பிரச்னையோ, கூட்டணிக்கான பிரச்னையோ இல்லை. இது மக்கள் பிரச்னை” - திருமாவளவன் எம்.பி.
விசிக- திமுக
விசிக- திமுகமுகநூல்
Published on

சமீபத்தில் ‘ஆட்சியில் பங்கு... அதிகாரத்தில் பங்கு’ என திருமாவளவன் பேசிய வீடியோ வெளியாகி சர்ச்சையாகி இருந்தது. இந்நிலையில், தற்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை திருமாவளவன் சந்தித்து பேசியுள்ளார். அந்தப் பேச்சுவார்த்தையில் என்ன நடந்தது? விரிவாக பார்க்கலாம்...

தமிழ்நாட்டில் ‘மது ஒழிப்பை’ வலியுறுத்தி வருகின்ற அக்டோபர் 2 ஆம் தேதி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில், “மது மற்றும் போதை ஒழிப்பு மகளிர் மாநாடு” அறிவிக்கப்பட்டுள்ளது. இம்மாநாடு, சமீபத்தில் விஷச்சாராயம் அருந்தி பல உயிர்கள் பறிபோன கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடத்தப்படும் என விசிக தெரிவித்துள்ளது.

இம்மாநாட்டில் பங்கேற்க தங்களின் கூட்டணியில் இல்லாத, அதிமுகவிற்கு விசிக தலைவர் திருமாவளவன் அழைப்பு விடுத்திருந்தார். இது, திமுக - விசிக கூட்டணி இடையே சலசலப்பை ஏற்படுத்தியது.

இதற்கு விளக்கமளித்த திருமாவளவன், “மது ஒழிப்பில் உடன்பாடுள்ள அனைத்துக் கட்சிகளும் ஒரே மேடையில் இணைய வேண்டிய தேவை இருக்கிறது. அதனால்தான் அதிமுக-வை அழைத்தேன். விஜய்யின் தவெக-க்கும் என் அழைப்பு உள்ளது. ஆகவே இதனை தேர்தலோடு பொருத்திப் பார்க்க வேண்டாம்” என்று தெரிவித்திருந்தார்.

விசிக- திமுக
அதிமுகவுக்கு விசிக அழைப்பு: கூட்டணிக்கான அச்சாரமா? - கடந்தகால வரலாறு என்ன?

இதனைத் தொடர்ந்து, ”ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு” என்று விசிக தலைவர் திருமாவளவன் பேசிய பழைய வீடியோவானது , திருமாவளவனின் எக்ஸ் தளத்தில், இரண்டு முறை பகிர்ந்து நீக்கப்பட்டு, இறுதியில் முழு வீடியோ பதிவிடப்பட்டது. இதுவும் விமர்சனமானது. இருப்பினும் இதுதொடர்பாக, ”எங்களின் செயல்பாடுகளால் கூட்டணியில் பாதிப்பு ஏற்பட்டாலும் கவலையில்லை” என திருமாவளவன் பேசி இருந்தார்.

இந்த நிலையில்தான், தற்போது முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்து பேசியுள்ளார் திருமாவளவன் அவர்கள். இன்று காலை சென்னை அண்ணா அறிவாலயம் சென்ற திருமாவளவன், ‘மது ஒழிப்பு மாநாட்டில் நீங்களும் (திமுக) பங்கேற்க வேண்டும்’ என்று முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்து அழைப்பு விடுத்துள்ளார்.

இதன்பிறகு, செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன் பேசுகையில்,

அமெரிக்க பயணத்தை நல்ல முறையில் முடித்து வந்த முதலமைச்சரை, விடுதலை கட்சிகள் சார்பில் சந்தித்து எங்களது வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்தோம். அமெரிக்காவில் இருந்த 2 வார காலமும் ஏராளமான நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்றார். அதன்மூலம், பல ஆயிரம் கோடி முதலீட்டுக்கான 19 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.

முதல்வரின் இப்பயணம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது. தமிழ்நாட்டிற்கு அந்நிய நேரடி முதலீட்டுக்கான வாய்ப்புகளும் உருவாகியிருக்கிறது. அத்தோடு அக்டோபர் 2 ஆம் தேதி மது மற்றும் போதை ஒழிப்பு மகளிர் மாநாடு நடைபெறவுள்ளது. இதில் இரண்டு முக்கியமான கோரிக்கைகளை நாங்கள் முன்வைத்து கொள்கிறோம்.

இரண்டு கோரிக்கை

  • முதலாவது அரசு மதுபானக்கடைகளில் விற்பனை இலக்கை படிப்படியாக குறைக்க வேண்டும்.

  • இரண்டாவது தேசிய அளவிலான கோரிக்கை. அதாவது, அரசியலமைப்பு சட்டம் 47-ன்படி படிப்படியாக மதுவிலக்கை இந்திய அளவிலே கொண்டுவருவதற்கு அனைத்து மாநில அரசுகளும் முன்வர வேண்டும் என்பது.

விசிக- திமுக
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை இன்று சந்திக்கிறார் விசிக தலைவர் திருமாவளவன்!

உறுப்பு எண் 47

மருத்துவ காரணங்களுக்கு பயன்படுத்தப்படும் போதைப்பொருட்களை தவிர, வேறு எந்த காரணங்களுக்காகவும் நுகர்வுக்கான எல்லா போதைப்பொருட்களும் தடை செய்ய வேண்டும் என்று கூறுகிற பிரிவுதான் சட்டப்பிரிவு 47.

நான்கு மாநிலங்களில் தவிர மற்ற அனைத்து மாநிலங்களிலும் அரசே முன்னின்று மதுக்கடைகளை நடத்துகிறது. இதற்கு ஒன்றிய அரசுக்கு பொறுப்பிருக்கிறதா இல்லையா? பிரிவு 47 ஐ பயன்படுத்தி, common civil code கொண்டுவர முயற்சிகிறவர்கள், ஏன் அதைப்பயன்படுத்தி national policy on liquar and drugs கொண்டுவரக்கூடாது? மது ஒழிப்புக்கென தனிப்பட்ட சட்டத்தை கொண்டுவரக்கூடாது? என்பதுதான் எங்ககளின் கேள்வி.

எங்களின் இந்த கோரிக்கையில் திமுகவிற்கும் உடன்பாடு இருக்கிறது.

பேரறிஞர் அண்ணாவே இதனை ஆதரித்தே மதுவிலக்கில் உறுதியாக இருந்தார். பிரிவு 47 ஐ எடுத்துரைத்து இந்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்தார். அதே கருத்தை முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களும் வலுவாக பேசியிருக்கிறார். ஒன்றிய அரசுக்கும் அழுத்தம் கொடுத்திருக்கிறார்.

விசிக- திமுக
“மது விலக்கு: பேரறிஞர் அண்ணாவின் பேசப்படாத சாதனை” - விசிக எம்.பி ரவிக்குமார்

கோரிக்கை மனு

இதையெல்லாம் குறிப்பிட்டுதான், 72 ஆவது பவளவிழா காணவிருக்கும் திராவிட கழகத்தின் தலைமை பொறுப்பில் இருக்கும் முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களும் இந்த வேண்டுகோளை இந்திய ஒன்றிய அரசுக்கு வலியுத்த வேண்டும் என்று கோரிக்கை மனு ஒன்றினை இன்று அளித்திருக்கிறோம்.

முதல்வர் அவர்கள், நாங்கள் கொடுத்ததை படித்து பார்த்தார். மேலும் ‘திமுகவின் கொள்கையும், மது ஒழிப்பு கொள்கைதான். அதில் எந்த மாற்றமும் இல்லை. எனவே, அக்டோபர் 2 ஆம் தேதி நீங்கள் நடத்துகிற மாநாட்டில் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மற்றும் செய்தி தொடர்பு செயலாளர் டி.கே.எஸ். இளங்கோவன் அவர்களும் பங்கேற்பார்கள்.

உங்களோடு சேர்ந்து நாங்களும் ஒன்றிய அரசின் கவனத்திற்கு இவ்விஷயத்தை எடுத்துச் செல்ல விரும்புகிறோம், அழுத்தம் கொடுக்க விரும்புகிறோம். தமிழகத்தில் மதுவிலக்கு நடைமுறைக்கு வருவதில் எங்களுக்கு மாற்று கருத்து இல்லை. நிர்வாக சிக்கலை கருத்தில் கொண்டு படிப்படியாக மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவோம்’ என்று முதல்வர் மதுஒழிப்புக்கு உறுதி அளித்திருக்கிறார்” என்றார்.

இதைத்தொடர்ந்து சர்ச்சையான வீடியோ பதிவு குறித்து செய்தியாளர்கள் அவரிடம் கேள்வி கேட்டனர். அதற்கு அவர்,

”1999 முதல் நாங்கள் பேசி வரும் கருத்து இது. சமூக ஊடங்களில் இது பெரிதாக பேசப்பட்டு வருகிறது. இந்த கோரிக்கையை நாங்கள் பேசிக்கொண்டே இருக்கிறோம். பேசிக்கொண்டே இருப்போம்.

எந்த தொடர்பும் இல்லை

எந்த நேரத்தில் எதை பேச வேண்டுமோ, அதை அந்த நேரத்தில் வலுவாக பேசுவோம். தேர்தலுக்கும் இதற்கு எந்த தொடர்பு இல்லை. எனவே, இதை தேர்தல் அரசியலோடு பிணைத்து பார்க்கவோ இணைத்து பார்க்கவோ வேண்டாம். விசிகவிற்கும் திராவிட முன்னேற்ற கட்சிக்கும் எந்த விரிசலும் இல்லை, எந்த நெருடலும் இல்லை.

நாங்கள் எங்கள் கொள்கைகளில் உறுதியாக உள்ளோம். அதனை முன்னிறுத்துகிறோம். இது எல்லாருக்குமான பிரச்னை. ஒரு கட்சிகான பிரச்னையோ, கூட்டணிக்கான பிரச்னையோ இல்லை. இது மக்கள் பிரச்னை. இந்தியா முழுக்கவே போதை புழக்கம் அதிகமாக இருக்கிறது. ஆகவே தேசிய அளவில் மாற்றம் வேண்டும்” என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com