“எல்.முருகனின் விஷமத்தைவிட மொழியால் பிரிக்கும் சீமானின் கருத்து ஆபத்தானது”-விசிகவின் சிந்தனை செல்வன்

திருமாவளவன் முதலமைச்சர் பற்றிய கருத்து பெரிய அளவில் விவாதத்தை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், அதுதொடர்பாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி எல்.முருகன் மற்றும் சீமான் இருவருக்கும் பதிலளித்துள்ளது.
திருமா, எல்.முருகன், சீமான்
திருமா, எல்.முருகன், சீமான்எக்ஸ் தளம்
Published on

‘ஆட்சியில் பங்கு - அதிகாரத்தில் பங்கு’ என விசிக தலைவர் திருமாவளவன் பேசி சில நாட்கள் கடந்த நிலையில், அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா, “நேற்று வந்தவர்கள் துணை முதலமைச்சர் ஆவதாகக் கூறுகிறார்கள். எங்கள் தலைவர் ஏன் இதுவரை ஆகவில்லை?” எனக் கேள்வி எழுப்பியிருந்தது பேசுபொருளானது. பின்னர் அதற்கு ஒருவழியாக அந்த விவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.

இந்தச் சூழலில், ’புதிய தலைமுறை’ டிஜிட்டலுக்கான ’ஸ்டாரும் சோறும்’ நிகழ்ச்சியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் வன்னி அரசு கலந்துகொண்டார். நிகழ்ச்சியில் பேசிய அவர், “விசிக தலைவர் திருமாவளவன் தமிழ்நாட்டின் முதலமைச்சராக வர வேண்டும் என்பதே எங்கள் கனவு” என தெரிவித்திருந்தார். இது நாடு முழுவதும் விவாதத்தை ஏற்படுத்தியது.

இதுதொடர்பாக கருத்து தெரிவித்த மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், “அருந்ததியர் இடஒதுக்கீட்டை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்கிற திருமாவளவன் எப்படி ஒரு பட்டியலின மக்கள் தலைவராக இருக்க முடியும்? இவர் எப்படி ஒட்டுமொத்த தமிழ்நாட்டின் தலைவராக இருக்க முடியும்? சமூகநீதியைப் பற்றி பேசுவதற்கு அவருக்கு எந்த அருகதையும் கிடையாது” எனக் கடுமையாகச் சாடியிருந்தார்.

அதேநேரத்தில் நாம் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், இக்கருத்து தொடர்பாக விடுதலைச்சிறுத்தைகள் கட்சிக்கு ஆதரவு தெரிவித்திருந்தார். அவர், ”நீங்கள் மத்திய அமைச்சராக இரு முறை ஆகும்போது, என் அண்ணன் அவர் நிலத்தில் முதலமைச்சராக ஆகக்கூடாதா? இதைச் சொல்வதற்கு நீங்கள் யார்? அவரை எப்பாடுபட்டாவது முதலமைச்சர் ஆக்குவோம்.. அப்போது என்ன செய்வீர்கள்..” என தெரிவித்தார். இதையடுத்து இந்த விவகாரம் பெரிய அளவில் விவாதத்தை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி எல்.முருகன் மற்றும் சீமான் இருவருக்கும் பதிலளித்துள்ளது.

இதையும் படிக்க: ”அதிக குழந்தைகளைப் பெறுபவரே தேர்தலில் போட்டி” - சட்டத்தைக் கொண்டுவரும் முடிவில் ஆந்திர முதல்வர்!

திருமா, எல்.முருகன், சீமான்
“எங்க அண்ணனை முதலமைச்சர் ஆக்குவோம்” - திருமாவளவனுக்கு துணை நிற்கும் சீமான்.. சூடேறும் அரசியல் களம்!

இதுதொடர்பாக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் சிந்தனை செல்வன் நீண்ட கருத்து ஒன்றைப் பதிவிட்டுள்ளார். இதுகுறித்து அவர் தன்னுடைய எக்ஸ் தளத்தில், “நேற்றும் இன்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி குறித்தும் எழுச்சித்தமிழர் தலைவர் தொல்.திருமாவளவன் குறித்தும் பாஜகவை சார்ந்த மத்திய இணை அமைச்சர் எல்.முருகனும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் நண்பர் சீமானும் எதிர்மறையாகவும் நேர்மறையாகவும் கருத்துகளை பகிர்ந்துகொண்டுள்ளனர். இக்கருத்துகள் கவனமாக அணுகப்பட வேண்டியவை. எல்.முருகன் பேசுவது விமர்சனம் அல்ல. அப்பட்டமான பொய்கள் நிரம்பிய அவதூறு. பட்டியல் சமூகத்தினரின் அகில இந்திய அளவிலான அரசியல் திரட்சியைக் கண்டு கதிகலங்கியுள்ள பாஜக சங்பரிவார கும்பல் அதை உடைத்துச் சிதைத்திட தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வருகிறது. அந்தச் சதிச்செயல் திட்டத்தின் ஒரு பகுதியாக பட்டியல் சமூகத்தினரைக் கூறுபோட்டு குறுக்குச் சுவர் எழுப்புகிற முழு உரிமையும் மாநிலங்களுக்கு அது அளித்துள்ளது. இந்த முயற்சி பட்டியல் சமூகங்களுக்குள் இருக்கிற நலிந்த பிரிவினரை மேம்படுத்துவதற்கு செய்யப்பட்ட ஏற்பாட்டை போல தோற்றமளிக்கலாம். ஆனால் அவர்களின் நோக்கம் உண்மையில் அதுவல்ல, மாறாக பட்டியல் சமூகத்தின் ஒற்றுமையை திரட்சியை சிதறடிப்பதுதான் என்பதை மிகத் துல்லியமாக எழுச்சித்தமிழர் அம்பலப்படுத்தி வருகிறார்.

எல்.முருகன் பேசுவது விமர்சனம் அல்ல. அப்பட்டமான பொய்கள் நிரம்பிய அவதூறு.
சிந்தனை செல்வன், விசிக பொதுச் செயலாளர்

தமிழகத்தில் உரிய தரவுகளின் அடிப்படையில் நல்ல நோக்கத்தோடு அருந்ததியருக்கு உள்ஒதுக்கீட்டை கலைஞர் கொண்டு வந்தபோது சட்டமன்றத்தில் தலித் மக்களின் பிரதிநிதியாக இருந்த ஒரே கட்சி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மட்டுமே. திராவிட முன்னேற்றக் கழகத்தோடு மிகுந்த தோழமையோடு தலைவர் எழுச்சித்தமிழர் விளங்கினார், எழுச்சித்தமிழரின் மனம் நிறைந்த ஆதரவு இருந்ததால்தான் தமிழகத்தில் அருந்ததியர்களுக்கான இடஒதுக்கீடு நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டது. இதை யாரும் மறுத்துவிட முடியாது. மாநிலங்களின் உரிமைகளை ஒவ்வொன்றாக பறித்துவரும பாஜக அரசு, பட்டியல் சமூகங்களுக்குள் குறுக்கு சுவர்களை எழுப்பி நிரந்தரமாக சிறுசிறு அடைப்புகளுக்குள் சிதறடித்து விடுகிற உரிமையை மட்டும் மாநிலங்களுக்கு வழங்கியுள்ளது. அதைத்தான் விடுதலை சிறுத்தைகள் கட்சி எதிர்க்கிறோம்.

இதையும் படிக்க: வேகம் காட்டும் இஸ்ரேல்| அழிக்கப்படும் தலைவர்கள்.. அடுத்த தலைவர் யார்? பட்டியல் ரெடி செய்த ஹமாஸ்!

திருமா, எல்.முருகன், சீமான்
”புதிதாக கட்சிக்கு வந்தவர் கொள்கை புரிதலின்றி பேசியிருப்பார்; திருமா இதை ஏற்க மாட்டார்”-ஆ.ராசா எம்பி

அருந்ததியர்கள் உரிமையில் விடுதலைச் சிறுத்தைகள் கொண்டிருக்கிற அக்கறையும் கவனமும் வெறும் தேர்தல் வாக்கு அரசியலுக்கானது அல்ல, அது சாதி ஒழிப்பே மக்கள் விடுதலை எனும் கொள்கை சார்ந்தது. விடுதலைச்சிறுத்தைகளை ஒரு குறிப்பிட்ட சாதிக்கு மட்டுமான கட்சி என குறுக்க முனையும் பாஜக எல்.முருகனின் அவதூறுகளும் அபாண்டங்களும் ஒருபோதும் மக்களிடத்தில் எடுபடாது. எல்.முருகனால் ’சாதி ஒழிக’ என உதட்டளவிலாவது சொல்ல முடியுமா? சாதி மறுப்பு திருமணங்கள் குறித்தும் அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகலாம் எனும் தமிழக அரசின் முன்னெடுப்பு குறித்தும் அவரது கட்சியின் கருத்தை அவரால் ஒளிவுமறைவின்றி வெளிப்படுத்த இயலுமா என்பது போன்ற ஆயிரம் கேள்விகளை அவர் எதிர்கொள்ள வேண்டியிருக்கும். இச்சூழலில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சகோதரர் சீமான், எல்.முருகனைக் கண்டித்து விடுதலைச்சிறுத்தைகளுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்திருக்கிறார். அவரது அன்பிற்கு நன்றி சொல்கிற அதே தருணத்தில், விடுதலைச்சிறுத்தைகளை ஆதரிப்பதற்காக ஒட்டுமொத்த அருந்ததிய சமூகத்தையும் தமிழர் அல்லாதவர்கள் என மொழிவழி தேசியப் பார்வை கொண்டு சிறுமைப்படுத்துவதை ஒருபோதும் விடுதலைச் சிறுத்தைகள் ஏற்றுக்கொள்ள மாட்டோம்.

எங்களை ஆதரிப்பதாகச் சொல்லி வெளிப்படும் சீமானின் கருத்து ஒட்டுமொத்த உழைக்கும் மக்களுக்கும் எதிரானது.
சிந்தனை செல்வன், விசிக பொதுச் செயலாளர்

பாஜக எல்.முருகன் தெரிவித்த கருத்தை ஓர் அடிமைச்சங்கியின் தனிப்பட்ட தாக்குதலாக கடந்துசெல்லலாம். ஆனால் எங்களை ஆதரிப்பதாகச் சொல்லி வெளிப்படும் சீமானின் கருத்து ஒட்டுமொத்த உழைக்கும் மக்களுக்கும் எதிரானது. வரட்டுதனமான மொழிவழி தேசியப் பார்வையின் அடிப்படையில் அருந்ததியர்களை தமிழர்கள் அல்ல என வகைப்படுத்துவதை ஒருபோதும் எளிதாக கடந்து போக முடியாது. அவர்கள் இந்த மண்ணின் குடிகள் அருந்ததியர்கள் ஒட்டுமொத்த தமிழ் சமூகத்தின் ஓர் அங்கம். சாதி அடையாளத்துடன் அவர்களை பிரிக்கும் எல் முருகனின் குரலைப்போலவே மொழி அடிப்படையில் எங்கள் உறவுகளை அந்நியர்களாக்குவதை ஒருபோதும் ஏற்க இயலாது. எங்கள் மீது உட்சாதி அவதூறுகளை அள்ளி தெளிக்கிற எல்.முருகனின் விஷமத்தைவிட, எங்களுக்கு ஆதரவாக குரல்கொடுப்பதாக இனவாத அடிப்படையில் உழைக்கும் அருந்ததிய மக்களை மொழியால் பிரிக்கும் சீமானின் கருத்து ஆபத்தானது” என அதில் பதிவிட்டுள்ளார்.

இதையும் படிக்க: தொடரும் மோதல்|சாலைகள் வெடிவைத்து தகர்ப்பு.. தென்கொரியாவை முதல்முறையாக எதிரிநாடாக அறிவித்த வடகொரியா!

திருமா, எல்.முருகன், சீமான்
குறுக்கு வழியில் அதிகாரத்திற்கு வர முய‌ற்சி: நடிகர்களின் அரசியல் ஆசை குறித்து திருமா

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com