"பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா போல ஆர்.எஸ்.எஸ் மற்றும் அதன் ஆதரவு அமைப்புகளும் தடை செய்யப்பட வேண்டும். ஏனெனில் துப்பாக்கிகளோடு திரியும் கும்பல் அவர்கள்" என சென்னை அசோக் நகரில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைமை அலுவலகத்தில் விசிக தலைவர் தொல்.திருமாவளவன் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியுள்ளார்.
ஆந்திர மாநிலம் குண்டூரில் மண்டல கமிஷன் தலைவராக இருந்த b.p.மண்டலுக்கு அங்கு உள்ள ஓ.பி.சி அமைப்பை சேர்ந்தவர்கள் சிலை வைத்தனர். சிலையை நிறுவும் முன்பே அதை ஆந்திர அரசு தகர்த்து உள்ளதாக கூறிய திருமாவளவன், “இது அவருக்கு செய்திருக்கிற அவமதிப்பு. இதை விசிக வன்மையாக கண்டிக்கிறோம். அதே இடத்தில் சிலை வைக்கவும். தமிழகத்திலும் அவருக்கு சிலை வைக்க வேண்டும். அகில இந்திய அளவில் அவரது பங்களிப்பு மகத்தானது. தேவைப்பட்டால் ஆந்திர விசிக சார்பில் குண்டுரில் ஆர்ப்பாட்டம் கூட நடத்தப்படும்” என்று எச்சரிக்கை விடுத்தார்.
தொடர்ந்து ஆர்எஸ்எஸ் பேரணிக்கு தடை விதி இருப்பது குறித்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த திருமாவளவன், “ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு தமிழக அரசு தடை விதித்து இருப்பது சரி. இதுதொடர்பான அரசின் காரணங்களும் ஏற்புடையது. தடை விதித்து இருக்கின்ற காரணத்தை விசிக ஏற்பதாகவும் அதே நேரத்தில் விசிகவின் சமூக நல்லிணக்க பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது அதிர்ச்சி அளிக்கிறது. 25 கட்சிகள் மனித சங்கிலி பேரணியில் பங்கேற்பதாக கூறியிருந்த நிலையில் இதற்கு தடை விதித்திருப்பது எந்த வகையிலும் நியாயமில்லை. விடுதலை சிறுத்தைகளும் ஆர்.எஸ்.எஸ்.உம் ஒன்று அல்ல. ஆர்.எஸ்.எஸ் போன்று மதவாத வெறுப்பு அரசியலை பேசும் அமைப்பு நாங்கள் இல்லை. மொட்டை தலைக்கும், முழங்காலுக்கும் முடிச்சு போட வேண்டாம்” என்று தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர், “அக்டோபர் 2 ஆம் தேதி ஆர்.எஸ்.எஸ் தமிழகத்தில் பேரணி நடத்துவதில் உள்நோக்கம் உள்ளது. போட்டிக்கு நாங்கள் பேரணி நடத்துவதாக பாஜக சொல்வதை ஏற்கிறேன். காந்தியை படுகொலை செய்தவர்கள் ஆர்எஸ்எஸ்-காரர்கள் என்பது உலகறிந்த உண்மை. அம்பேத்கர் நூற்றாண்டு விழா முடிந்து 27 ஆண்டுகள் ஆகிறது. அம்பேத்கருக்கு நூற்றாண்டு விழா கொண்டாடுகிறோம் என்பது அம்பேத்கரை இவர்கள் தவறாக பயன்படுத்துகிறார்கள் என்பதாகும். இந்துத்துவத்தை வீழ்த்தாமல் சமத்துவம் மலராது என முழங்கியவர் அம்பேத்கர். அம்பேத்கர் பிறந்த நாளை கொண்டாடுவோம் என்று பாஜக சொல்வது அப்பட்டமான ஏமாற்று வேலை” என்று கூறினார்.
தொடர்ந்து, “ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு நடத்த சொல்லப்படும் மூன்று காரணங்களும் முற்றிலும் பொருந்தாத காரணங்கள் உள்ளன. ஆர்.எஸ்.எஸ். மீது குண்டு வெடிப்பு வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குள் இந்தியா முழுவதும் உள்ளது. பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா போல ஆர்.எஸ்.எஸ்-ம் அதன் ஆதரவு அமைப்புகளும் தடை செய்யப்பட வேண்டும். துப்பாக்கிகளோடு திரியும் கும்பல் அவர்கள். ஆர்எஸ்எஸ் போன்ற பயங்கரவாத அமைப்பை தடை செய்யாமல், இந்தியா போன்ற நாட்டில் பரந்துபட்ட மக்களுக்கு தொண்டாற்றும் பிஎஃப்ஐ அமைப்பை தடை செய்ததை உள்நோக்கம் உள்ளதாக பார்க்கிறோம் என தெரிவித்த அவர்.
பிற மாநிலங்களில் ஆர் எஸ் எஸ் அணிவகுப்புக்கு அனுமதி கொடுத்தது போல, கூழை கும்பிடு போட்டு அனுமதி கொடுக்கும் அரசு தமிழ்நாட்டில் இல்லை. இங்கு நடப்பது பெரியார் - அண்ணா - கலைஞர் அரசு. பிற மாநிலங்களில் செய்த சேட்டையை தமிழ்நாட்டில் செய்யலாம் என்று பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் பார்த்தால், தமிழ்நாட்டில் அவர்கள் வால் ஒட்ட நறுக்கப்படும்” என்று எச்சரிக்கை விடுத்தார்.