விழுப்புரம் தொகுதியில் உதயசூரியன் சின்னத்திலும் சிதம்பரம் தொகுதியில் தனிச் சின்னத்திலும் போட்டியிட இருப்பதாக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தெரிவித்துள்ளது.
திமுக தலைமையில் காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளை திமுக நேற்று முன்தினம் அறிவித்தது. அதன்படி, விழுப்புரம் மற்றும் சிதம்பரம் ஆகிய 2 மக்களவை தொகுதிகளில் விடுதலை சிறுத்தைகள் கட்சி போட்டியிடும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்தார்.
இந்நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் போட்டியிடும் இரண்டு வேட்பாளர்களை அக்கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் அறிவித்துள்ளார். அதன்படி, விழுப்புரத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் ரவிக்குமார், சிதம்பரத்தில் தொல். திருமாவளவன் போட்டியிடு வார்கள் என்று அவர் அறிவித்தார். இதில் சிதம்பரம் தொகுதியில் திருமாவளவன், தனி சின்னத்திலும் விழுப்புரத்தில் ரவிகுமார் உதயசூரியன் சின்னத்திலும் போட்டியிடுகின்றனர்.
இந்நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்த தொல். திருமாவளவன், பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அவர் கூறும்போது, ’’விழுப்புரத்தில் ஏற்கனவே ஸ்டார் சின்னத்தில் போட்டியிட்டிருக்கிறோம். இப்போது அந்த தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் மீண்டும் போட்டியிடுகிறோம். அந்த தொகுதியின் கூட்டணி சக்தி, விடுதலை சிறுத்தைக் கட்சியின் வலிமையை கருத்தில் கொண்டு உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெறுவோம். நாங்கள் கேட்ட சின்னம் எங்களுக்கு ஒதுக்கப்படவில்லை. மூன்று பட்டியல் அனுப்பியும் இன்னொரு பட்டியல் கேட்டிருக்கிறார்கள். நான்காவதாக ஒரு பட்டியலை அனுப்பியிருக்கிறோம்.
சிதம்பரம் தொகுதியில் ஐந்தாவது முறையாக நான் போட்டியிடுகிறேன். அந்த தொகுதி வாக்களர்களுக்கு நான் நன்கு அறிமுகமானவன். அந்த வாக்காளர்கள் எனக்கு வாக்களித்து ஆதரவு நல்கியவர்கள். அதனால் தனி சின்னத்தில் போட்டியிடுகிறேன். விழுப்புரம் தொகுதியில் உள்ள அனைத்துச் சூழலையும் ஆய்வு செய்து உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறோம்.
வன்னியர்களுடன் எங்களுக்கு எந்த பிரச்னையும் இல்லை. அரசியல் ஆதாயத்துக்காக சிலர் ஏதும் தூண்டிவிடுவார்கள். அதற்கு யாரும் இரையாகி விடக்கூடாது என்று கேட்டுக்கொள்கிறேன்’’ என்றார்.