அயோத்தி வழக்கில் வழங்கப்பட்டுள்ள தீர்ப்பு, அரசியல் தலையீட்டின் வெளிப்பாடாகவே தெரிகிறது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ’ பாபர் மசூதி இடிப்பு வழக்கில் அளிக்கப்பட்ட உச்சநீதிமன்றத் தீர்ப்பு சட்டத்தின் அடிப்படையிலோ ஆதாரங்களின் அடிப்படையிலோ அளிக்கப்பட்டதாகத் தெரியவில்லை. சட்டம் ஒழுங்கை கருத்தில் கொண்டு சமூக நல்லிணக்கத்தையும் கருத்தில் கொண்டு அளிக்கப்பட்ட சமரச தீர்ப்பாகவே தெரிகிறது.
இஸ்லாமியர்களுக்கு மாற்று இடம் வழங்க அளித்துள்ள தீர்ப்பு, நீதியை நிலைநாட்டும் முயற்சியாக இல்லாமல், சமரச முயற்சியாகவே இருக்கிறது. ராமர் கோயில் கட்டுவதற்கு மத்திய அரசு அறக்கட்டளை நிறுவ வேண்டும் என்பதை போல, பாபர் மசூதி கட்டவும் ஏன் அறக்கட்டளை நிறுவ கூடாது? இஸ்லாமியர்கள் உரிய ஆவணங்களை ஒப்படைக்கவில்லை எனில் இந்து அமைப்புகள் என்ன ஆவணங்கள் ஒப்படைத்தனர் என்ற கேள்வி எழுகிறது.
சாஸ்திரங்கள் அடிப்படையில் இந்துக்களின் நம்பிக்கையை மட்டுமே ஆதாரமாக வைத்து மொத்த இடத்தையும் இந்துக்களுக்கே வழங்கி இருப்பது அரசியல் தலையீட்டின் வெளிப்பாடாகவே தெரிகிறது’ என்று தெரிவித்துள்ளார்.