தூத்துக்குடி மாவட்டம், வல்லநாடு அருகே உள்ள முறப்பநாட்டில் கிராம நிர்வாக அலுவலகத்தில் புகுந்து கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்ஸ்சிஸ் என்பவரை மர்ம நபர்கள் சரமாரியாக வெட்டிக்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகே உள்ள முறப்பநாடு கிராம நிர்வாக அதிகாரியாக லூர்தர் பிரான்சிஸ் என்பவர் பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பு கிராம நிர்வாக அதிகாரி அந்த பகுதியில் ரோந்து பணியில் செல்லும்போது தாமிரபரணி ஆற்றில் இருந்து ராமசுப்பு என்பவர் இருசக்கர வாகனத்தில் ஆற்று மணலை கடத்திச் சென்றுள்ளார். அப்போது கிராம நிர்வாக அதிகாரியை பார்த்தவுடன் ஆற்று மணலை போட்டுவிட்டு இருசக்கர வாகனத்தில் மின்னல் வேகத்தில் சென்றுள்ளார்.
இதுகுறித்து கிராம நிர்வாக அதிகாரி லூர்து பிரான்சிஸ் முறப்பநாடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்துள்ளனர்.
இந்த நிலையில், இன்று கிராம நிர்வாக அதிகாரி அலுவலகத்தில் பணிபுரிந்து கொண்டிருந்தபோது சம்பவ இடத்துக்கு வந்த இரண்டு பேர் அரிவாளால் அவரை சரமாரியாக வெட்டி விட்டு, ”என் மீது எப்படி காவல் நிலையத்தில் புகார் அளிக்கலாம்?” என கேள்வி எழுப்பிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர். படுகாயம் அடைந்த கிராம நிர்வாக அதிகாரி லூர்து பிரான்சிஸ் நெல்லை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
மேலும் இந்த கொலை தொடர்பாக காவல்துறையினர் கலியாவூரைச் சேர்ந்த ராம சுப்பிரமணியன் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் உடன் சென்ற மற்றொருவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.