கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பாக சட்ட மேதை அண்ணல் அம்பேத்கரின் 132வது பிறந்த நாளை முன்னிட்டு அம்பேத்கர் பல்லக்கு ஊர்வலம் நடைபெற்றது. அண்ணல் அம்பேத்கரின் உருவ படத்தை தேரில் வைத்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முக்கிய பொறுப்பாளர்கள் ஆன வன்னியரசு ,கோவேந்தன் உட்பட 500க்கும் மேற்பட்டோர் ஓசூரில் முக்கிய வீதிகளான ராயக்கோட்டை சாலையில் இருந்து நேதாஜி சாலை, எம்.ஜி சாலை ஏரி தெரு, பழைய பெங்களூர் சாலை என முக்கிய வீதிகளின் வழியாக பேரணியாக வந்து இறுதியில் ராம்நகர் அண்ணா சிலை முன்பு அமைக்கப்பட்டு இருந்த அண்ணல் அம்பேத்கரின் திரு உருவப் படத்திற்கு மலர்கள் தூவி வீரவணக்கம் செலுத்தினார்கள்.
பின்னர் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் திராவிடர் கழகம், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் பேசினார்கள்.
இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் வன்னியரசு தெரிவிக்கையில், ஆருத்ரா நிதி நிறுவன மோசடி விவகாரத்தில் அண்ணாமலைக்கு பணம் கை மாறி இருக்கிறது. இந்த விவகாரத்தில் பாஜகவின் அண்ணாமலையை தமிழக அரசு கைது செய்து விசாரணை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை வைத்தார்.
தொடர்ந்து ஆர்எஸ்எஸ் பேரணிக்கு உச்சநீதிமன்றம் அனுமதி அளித்திருப்பதை சுட்டிக்காட்டிய அவர் இந்த உத்தரவுக்கு எதிராக மறுசீராய்வு மனுவை தாக்கல் செய்து ஆர்எஸ்எஸ் பேரணியை நடத்த விடாமல் தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.
இதைத்தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடினர்.