செய்தியாளர்: ஆர்.இம்மானுவேல் பிரசன்னகுமார்
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த கேத்தாண்டப்பட்டி - ஜோலார்பேட்டை ரயில் நிலையத்திற்கு இடையே சென்னை துறைமுகத்தில் இருந்து பெங்களூரு ஒயிட் பீல்டு பகுதிக்கு சரக்கு ரயில் சென்று கொண்டிருந்தது. அப்போது, திடீரென ஒரு சரக்கு பெட்டி தடம் புரண்டு விபத்துக்குள்ளானதாக தகவல் வெளியானது.
இதனை தொடர்ந்து ரயில் ஓட்டுநர் ரயிலை நிறுத்தி, உடனடியாக ஜோலார்பேட்டை ரயில்வே துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர், தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த ஜோலார்பேட்டை ரயில்வே துறையினர் மற்றும் ரயில்வே காவல்துறையினர், சரக்கு ரயிலின் சக்கரத்தை சரிசெய்யும் பணியில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
இதனால் பெங்களூர் மார்க்கத்தில் செல்லும் காவேரி எக்ஸ்பிரஸ், எஸ்.எப் மெயில் எக்ஸ்பிரஸ், கோயமுத்தூர் மார்க்கத்தில் செல்லும் அலபி எக்ஸ்பிரஸ், நீலகிரி எக்ஸ்பிரஸ், சேரன் எக்ஸ்பிரஸ் ஆகிய ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் பெங்களூர், கோவை மார்க்கத்தில் ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளதால் பயணிகள் அவதியடைந்தனர்.
ரயில் தடம்புரள வில்லை என தெற்கு ரயில்வே விளக்கம் அளித்துள்ளது.. வெப்ப உராய்வு காரணமாக ரயில் சக்கரம் பழுதடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.