வாணியம்பாடியில் வங்கியில் இருந்து பணம் எடுத்துவிட்டு நடந்து சென்ற பெண்ணிடம், உடையில் கறை இருப்பதாகக் கூறி ஒரு லட்சத்து பத்தாயிரம் ரூபாயை வழிப்பறி செய்த இளைஞர்களை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த அம்பூர்பேட்டை பகுதியை சேர்ந்த பாத்திமா என்பவருடைய மகன் அல்தாப். இவருக்கு வரும் பிப்ரவரி மாதம் திருமணம் நடைபெற உள்ளது. திருமண ஏற்பாடு செலவிற்காக பணம் எடுக்க பாத்திமா, வாணியம்பாடி பேருந்து நிலையம் அருகே உள்ள கனரா வங்கிக்கு சென்றுள்ளார். அங்கு தன்னுடைய வங்கி கணக்கில் இருந்து ரூ.1 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் பணத்தை எடுத்துக் கொண்டு பேருந்து நிலையம் சென்றுள்ளார்.
அப்போது வங்கியில் இருந்தே அவரைப் பின்தொடர்ந்து வந்த 2 இளைஞர்கள் பாத்திமாவின் உடையில் அழுக்குப் படிந்துள்ளாதாக கூறி உள்ளனர். உடனே அவரும் உடையின் பின்னால் என்ன கறை உள்ளது..? என்று திரும்பிப் பார்த்தபோது அவரின் கைப்பையை பறித்து கொண்டு அந்த இளைஞர்கள் தப்பி ஓடி உள்ளனர்.
இதனை சற்றும் எதிர்பாராத பாத்திமா சத்தம் போட்டுள்ளார். அவரது சத்தத்தை கேட்ட பொதுமக்கள் உடனே உதவிக்கு வந்து என்ன என்று விசாரித்துள்ளனர். அதற்குள் அந்த 2 இளைஞர்களும் தப்பி ஓடிவிட்டனர். இச்சம்பவம் குறித்து வாணியம்பாடி நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி தப்பியோடிய அந்த 2 மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.