சென்னை அடுத்த வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் இன்று முதல் கட்டண உயர்வு அமல்படுத்தப்பட்டது. பூங்காவில் முன்பு வசூலிக்கப்பட்ட கட்டணம் தனி நபர் பெரியவர்களுக்கு 90 ரூபாய், செல்போன் கொண்டு வந்தால் 25 ரூபாய் என மொத்தம் 115 ரூபாயாக இருந்தது.
தற்போது அந்த கட்டணம் 200 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. மாற்றுத் திறனாளி, 5 வயதிற்குட்பட்ட சிறுவர்களுக்கு கட்டணமில்லை, சக்கர நாற்காலிக்கு கட்டணமில்லை, ஹேண்டி கேமரா 350 ரூபாய், கேமரா 750 ரூபாய், சிங்கம், மான் போன்ற விலங்குகளை சுற்றிப்பார்க்க வாகனம் 150 ரூபாய், அரசுப் பள்ளி மாணவர்களுக்கும் உடன் வரும் ஆசிரியர்களுக்கும் 20 ரூபாய் என கட்டணம் நடைமுறை படுத்தப்பட்டுள்ளது.
இந்த கட்டண உயர்வு குறித்து புதிய தலைமுறைக்கு பூங்கா உதவி இயக்குநர் மணிகண்ட பிரபு அளித்த பேட்டியில், ”உணவு, ஊதியம், பராமரிப்பு, ஆகியவற்றிற்காக கட்டணம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. 5 வயதிற்குட்பட்ட குழந்தைகள், மாற்றுத் திறனாளிகளுக்கு கட்டணமில்லை, சக்கர நாற்காலிக்கு முன்பு 25 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்பட்டது. தற்போது இலவசமாக வழங்கப்படுகிறது. அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்கள் அவர்களுடன் வரும் ஆசிரியர்களுக்கு சலுகைகள் அளிக்கப்படுகிறது. சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், கழிவறை, பாலூட்டும் அறை ஆகியவைகளுக்கு கட்டணமில்லை” என தெரிவித்தார்.
இது தொடர்பாக பூங்காவிற்கு வருகை புரிந்த பார்வையாளர்களிடம் கேட்டபோது, “வெளியூரில் இருந்து வருகிறோம். திடீரென கட்டணம் 200 ரூபாய் என உயர்த்தியது அதிர்ச்சியாக இருந்தது. கையில் பணம் இல்லாததால் ஆன்லைன் மூலம் பணம் செலுத்தியதாகவும் கூறினர். ஒரு சிலர் முதல் முறை வெளியூரில் இருந்து குடும்பத்துடன் பூங்காவிற்கு வந்தபோது, வாகனம் நிறுத்த கட்டணம், நுழைவு கட்டணம், தண்ணீர் பாட்டிலுக்கு வைப்புத் தொகை 10 ரூபாய், பேட்டரி காருக்கு கட்டணம், என 500 ரூபாய்க்கு மேல் வசூல் செய்யப்படுகிறது. நாங்கள் எப்படி வருவது என தங்களது ஆதங்கத்தை கொட்டி தீர்த்தனர்.
கூடுதல் கட்டணம் வசூல் செய்யாமல் இருந்தால் அதை வைத்து குழந்தைகளுக்கு ஏதாவது வாங்கிக் கொடுப்போம், கட்டண உயர்வால், நடுத்தர குடும்பத்தினர் பூங்காவிற்குள் வராமல் வெளியே இருந்து வேடிக்கை பார்த்து விட்டுச் செல்லும் நிலையை ஏற்படுத்தும் எனவே கட்டண உயர்வை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என பார்வையாளர்கள் கோரிக்கை வைத்தனர்.