தேசிய ஜனநாயக கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என பாஜகவின் தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கான களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. இதில், அதிமுக - பாஜக இடையிலான உறவு குறித்த விவாதங்கள் அவ்வவ்போது எழுந்த வண்ணம் உள்ளன. அதாவது, அதிமுக கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் யார்? யார் தலைமையில் சட்டமன்ற தேர்தலை சந்திப்பது?. இந்த இரண்டு இரண்டு கேள்விகளுக்கு அதிமுக பதில் அளித்துவிட்ட போதும், பாஜக அதனை இன்னும் அதிகாரப்பூர்வமாக ஆமோதிக்கவில்லை. அதிமுகவை பொறுத்தவரை எடப்பாடி பழனிசாமிதான் முதல்வர் வேட்பாளர். அதிமுக தான் கூட்டணியின் தலைமை கட்சி. ஆனால், தமிழக பாஜக தலைவர்கள் இதனை ஆமோதிக்காமல் தேசிய தலைமைதான் முதல்வர் வேட்பாளரை அறிவிக்கும் என்று தொடர்ச்சியாக கூறி வருகிறார்கள். தமிழகம் வந்திருந்த பிரகாஷ் ஜவடேகரும் முதல்வர் வேட்பாளர் குறித்த கேள்விக்கு மௌனத்தை பதிலாக கொடுத்துள்ளார்.
இந்நிலையில்தான், தேசிய ஜனநாயக கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என பாஜகவின் தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.
அத்துடன், தேசிய ஜனநயக கூட்டணி கூட்டத்தை கூட்டினால்தான் முதல்வர் வேட்பாளர் யார் என்று அறிவிப்போம் எனவும் அவர் கூறியுள்ளார்.
கூட்டணியில் மாற்றம் ஏற்படுமா என்ற கேள்விக்கு பதிலளித்த வானதி சீனிவாசன், “அரசியலில் எதுவும் நிரந்தரமல்ல” என்று பதிலளித்தார். தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு அதிமுகதான் தலைமை, அதில் மாற்றமில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.