“அதிமுகவில் இருக்கக்கூடிய அடுத்த கட்ட தலைவர்கள் மற்றும் பாஜக நிர்வாகிகள் ஒரு சிலரிடம் கருத்து மோதல் உள்ளது. ஆரோக்கியமான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு இது சிக்கலை உருவாக்கும்” என கோவை தெற்கு தொகுதி பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் தெரிவித்தார்.
கோவையில் எம்எல்ஏ வானதி சீனிவாசன் நேற்று செய்தியாளர்களை சத்தித்தார். அப்போது பேசிய அவர், “முதல்வர் முதலில் அவருடன் இருப்பவர்களிடம் இருந்து அவரையும் அரசாங்கத்தையும் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். அதிமுகவில் இருக்கக் கூடிய அடுத்த கட்ட தலைவர்கள் மற்றும் பாஜக நிர்வாகிகள் ஒரு சிலரிடம் கருத்து மோதல் உள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணிக்கு இது சிக்கலை உருவாக்கும்.
ஆனால், இதையெல்லாம் தேசிய தலைமையிடம் தெரிவிக்கப்பட்டு, கடந்த வாரம் ஜேபி.நட்டா, கிருஷ்ணகிரி வந்தபோது பாஜகவில் உள்ள அனைத்து தலைவர்களையும் அழைத்து இதுபோன்று விரும்பத்தகாத விஷயங்கள் நடைபெறாத வண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டும் என அறிவுரை வழங்கியுள்ளார். எனவே வரும் காலத்தில் இவை அனைத்தும் சரியாகிவிடும் என நம்புகிறோம்.
கோடை காலம் வரும் முன்பே கேரளா அரசாங்கத்திடம் பேசி சிறுவாணி அணையின் நீர்மட்டத்தை உயர்த்த வேண்டும் என நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தோம். ஆனால், தற்பொழுது கோடை காலம் வரும் முன்பே அங்கு நீரின் மட்டம் குறைந்துள்ளது. ஆனால் சுயநலத்திற்காக இவர்கள் எந்த பிரச்னையையும் கண்டு கொள்வதில்லை. குறிப்பாக கோவையில் ஏதேனும் பிரச்னை என்று சொன்னால் எந்த கவனத்தையும் கொடுப்பதில்லை. இன்னும் கோவை மீது உள்ள வெறுப்பு அவர்களுக்கு தீரவில்லை என்று நினைக்கிறேன்” என்றார்.
ஆன்லைன் ரம்மி தடை குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர், “ஆன்லைன் ரம்மி விளையாட்டு தடை என்பதில் எங்களுக்கு மாற்றுக் கருத்தே கிடையாது. இந்த தடைச் சட்டத்தை கொண்டு வருகிற போது நாளை நீதிமன்றத்தில் அது செல்லுபடி ஆகக்கூடிய சட்டமா என்பதை தான் ஆளுநர் கேட்டுள்ளார். இதே கேள்விகளை நாளை நீதிமன்றம் கேட்டால் தமிழக அரசு அல்லது பெரியார் திராவிட கழகம் இப்படித்தான் செய்யுமா? இது போன்ற எந்த போராட்டம் வேண்டுமானாலும் நடத்திக் கொள்ளட்டும் அவர்கள். எங்களைப் பொறுத்தவரை ஆன்லைன் ரம்மியை தடை செய்து மக்களை காப்பாற்ற வேண்டும். அரசாங்கம் இதை கௌரவப் பிரச்னையாக பாராமல் சட்டரீதியாக கவனம் செலுத்த வேண்டும்” என தெரிவித்தார்.