கடலூர் மாவட்டம் வடலூரில் வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபையில் 147வது தைப்பூச திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது.
தைப்பூச திருவிழாவையொட்டி வடலூரில் வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபையில் காலை 6 மணிக்கும், 10 மணிக்கும் ஜோதி தரிசனம் நடைபெற்றது. இதை தொடர்ந்து பிற்பகல், மாலை, இரவு மற்றும் அதிகாலையும் ஜோதி தரிசனம் நடைபெறவுள்ளது. இதில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டு ஜோதி வழிபாடு நடத்தி வருகின்றனர். அமைச்சர்கள் எம்.சி.சம்பத், காமராஜ், சேவூர் ராமச்சந்திரன் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.
தைப்பூச திருவிழாவை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் திரண்டுள்ளதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஜீவ காருண்ய நெறிகளையும், செம்மையான அறநெறி வாழ்க்கைக்கு உரிய வாழ்வியல் தத்துவங்களையும் போதித்தவர் வள்ளலார். வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன் என்று கூறிய வள்ளலார், மானுடச் சமூகம் உண்மையும், புனிதமும் பெறும் பொருட்டு அருளியதே திருவருட்பாவாகும். "கடவுள் ஒருவரே", "இறைவன் ஒளி வடிவானவன்" என்பதை உலகிற்கு எடுத்துரைக்கும் வகையில் வடலூரில் சத்திய ஞான சபையை வள்ளலார் நிறுவினார். வள்ளலார், தைப்பூச நன்னாளில் அருட்பெருஞ்சோதி ஆண்டவர் நிலையை அடைந்ததால் அந்நாளில் ஆண்டுதோறும் ஜோதி தரிசனம் சிறப்பாக நடைபெற்று வருகிறது.