தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக இன்று பல்வேறு விஷயங்கள் விரல் நுனியிலேயே செய்யப்பட்டு வருகின்றன. சமீபகாலமாக டிரெண்டிங்கில் உள்ள ஏஐ (AI) எனப்படும் செயற்கை நுண்ணறிவு டெக்னாலஜியைப் பயன்படுத்தி எந்த ஒரு புகைப்படம் அல்லது வீடியோவைச் சுலபமாக மற்றொருவரின் முகத்தை வைத்து மார்பிங் செய்துவிட முடியும். இந்த தொழில்நுட்பத்தால் பல சைபர் தாக்குதல்கள் நடைபெற்று வருகின்றன. சமீபத்தில் இந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, பிரபல நடிகை ராஷ்மிகா மந்தனாவின் புகைப்படத்தை இணைத்து மார்பிங் செய்து இணையத்தில் கசியவிட்டிருந்தனர்.
இந்த வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் மத்திய அரசு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியது. அதில், ’புகார் அளித்த 24 மணி நேரத்திற்குள் சர்ச்சைக்குரிய வீடியோவை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக வலைதள நிறுவனங்களுக்கும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. சித்தரிக்கப்பட்ட வீடியோ வெளியிட்டு குற்றம் நிரூபிக்கப்பட்டால் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையுடன் ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும்’ எனவும் எச்சரித்திருந்தது. ராஷ்மிகா மந்தனா தவிர காஜோல், பிரியங்கா சோப்ரா, ரத்தான் டாடா ஆகியோரின் போலி காணொளிகளும் வைரலாகின என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோன்ற பிரச்னையை, இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரும் சமீபத்தில் சந்தித்து இருந்தார். இதுதொடர்பான வெளியான fake வீடியோவில், சச்சின் தனது மகள் சாராவை பற்றிப் பேசுவதுபோல் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. அதில் தனது மகள் ஆன்லைன் வீடியோ கேம் மூலம் பல பணத்தை சம்பாதித்து வருவதாகவும் இதனை ரசிகர்கள் நீங்களும் பயன்படுத்தலாம் என்று சச்சின் கூறுவதுபோல் வீடியோ வெளியிடப்பட்டு இருந்தது.
இந்த வீடியோ வெளியான பிறகு சச்சின் டெண்டுல்கர் அந்த வீடியோவிற்கும், தனக்கு எந்த தொடர்பும் இல்லை. அது போலியானவை என்று கூறி வீடியோ வெளியிட்டார். இதுதொடர்பாக சச்சின், "இந்த வீடியோக்கள் போலியானவை. தொழில்நுட்பத்தை தவறாகப் பயன்படுத்துவதைப் பார்க்கும்போது கவலையாக இருக்கிறது. இதுபோன்ற வீடியோக்கள், விளம்பரங்கள் மற்றும் பயன்பாடுகள் ஆகியவற்றை அதிக எண்ணிக்கையில் புகாரளிக்குமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன். சமூக ஊடக தளங்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் மற்றும் புகார்களுக்கு பதிலளிக்க வேண்டும். தவறான தகவல்கள் மற்றும் ஆழமான போலிகள் பரவுவதைத் தடுக்க அவர்களின் முடிவில் இருந்து விரைவான நடவடிக்கை முக்கியமானது”என்று சச்சின் தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்திருந்தார்.
இந்த வரிசையில்தான் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி குறித்து கவிஞர் வைரமுத்து அவதூறாக பேசுவதுபோல டீப் ஃபேக் வீடியோ ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், கருணாநிதி குறித்து வைரமுத்து மிகவும் தரக்குறைவாக பேசுவது போன்ற வசனங்கள், கவிதை மொழியில் சித்தரிக்கப்பட்டுள்ளது.
சமூகவலைதளங்களில் அதிகமாக பரவி வரும் வீடியோ பெரும் அதிர்வலைகளை உண்டாக்கியுள்ள நிலையில், இது தொடர்பாக திமுக மாநில இளைஞரணி துணை செயலாளர் இளையராஜா, திருத்துறைப்பூண்டி காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
இந்த வீடியோ X வலைத்தளத்தில் ’drsenthil’ என்ற twitter பக்கத்தில் பதிவிடப்பட்டிருந்தது. இதனையடுத்து வழக்குப்பதிவு செய்யப்பட்டு காவல் ஆய்வாளர் தலைமையில், உதவி ஆய்வாளர் சரவணன் மற்றும் சைபர் கிரைம் உதவி ஆய்வாளர் கணபதி ஆகியோர்கள் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது.
அப்போது, சர்ச்சைக்குரிய அந்த அவதூறான பதிவை வெளியிட்டவர், தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த கோவிந்தராஜன் மகன் செந்தில்நாதன் என்பது தெரியவந்தது. BE Computer Science படித்துவிட்டு பெங்களூரில் உள்ள L&T Technology Services (LTTS) என்ற தனியார் நிறுவனத்தில் பொறியாளராக பணியாற்றி வருவதும் தெரியவந்தது. தொடர்ந்து, அவரின் சமூகவலைதள பக்கங்களை ஆய்வு செய்ததில், சமூகவலைதளங்களில் தொடர்ந்து சர்ச்சைக்குரிய பதிவுகளை பதிவிடுபவர் என்பது தெரியவந்தையடுத்து, செந்தில்நாதனை கைது செய்த போலீஸார் விசாரணைக்குப் பிறகு சிறையில் அடைத்தனர்.