"எழுத்தாளராக இருக்கிற ஆண் மிக பாவம். எழுத்தாளராக இருக்கிற பெண் மிக மிக மிக மிக மிக பாவம். ஏனென்றால் வீட்டில் எழுத்தாளர்களை யாரும் விரும்ப மாட்டார்கள்” என்று தேனியில் நடந்த புத்தகத் திருவிழாவில் கவிப்பேரரசு வைரமுத்து பேசினார்.
தேனி மாவட்ட நிர்வாகம் சார்பில் தேனி மேனகா மில் மைதானத்தில் நடந்து வரும் தேனி மாவட்டத்தின் முதல் புத்தகத் திருவிழாவில் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு கவிஞர் வைரமுத்து நேற்று வருகை தந்தார்.
புத்தக அரங்குகளை பார்வையிட்ட அவர், புத்தக பிரியர்கள் வாங்கி இருந்த சில புத்தகங்களில் கையொப்பமிட்டார். பின் பல்வேறு கலை நிகழ்ச்சிகளில் வெற்றி பெற்ற பள்ளி மாணவ மாணவியரோடு புகைப்படம் எடுத்தும், பல ரசிகர்களுடன் செல்ஃபி எடுத்தும் அவர்களை உற்சாகப்படுத்தினார்.
பின், நடந்த சர்வதேச மகளிர் தின விழாவில், தேனி மாவட்டத்தின் பத்துக்கு மேற்பட்ட பெண் எழுத்தாளர்களை கௌரவித்தார் வைரமுத்து. பின் விழாவில் அவர் பேசியதாவது, ''140 கோடி மக்கள் தொகை கொண்ட இந்த தேசம், உலகளவில் புத்தக வாசிப்பில் முதலிடத்தை தொட்டிருக்க வேண்டும். ஐந்தாவது இடத்தில் தள்ளப்பட்டு இருப்பது தான் வருத்தமான விஷயம்.
140 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியாவின் எத்தனை கோடி புத்தகங்கள் அச்சடிக்கப்பட்டிருக்க வேண்டும் என்று கருதிப் பாருங்கள். அறிவில் நாம் எங்கே பின் தங்கி இருக்கிறோம் என்பதை நினைக்கும் போது வருத்தமாக இருக்கிறது.
இப்போது நாம் கடந்து கொண்டிருப்பது கல்வி யுகம். இந்த கல்வி யுகத்தில் தங்களை தயார்படுத்திக் கொள்பவர்கள் மட்டும் தான் இனி வாழ முடியும். ஒவ்வொரு மனிதனும் தனது வாழ்நாளில் கடைசி 10 ஆண்டுகள் முழுக்க முழுக்க தொழில்நுட்பம் இருந்தால் தான் இனி வாழ முடியும் என்ற நிலைமைக்கு வந்து விட்டோம். ஆனால் கடைசி 10 ஆண்டுகளில் உறவுகளின் அரவணைப்பு எவ்வளவு இருக்கும் என்று சொல்ல முடியாது. உங்கள் நோய்க்கு எவ்வளவு சிகிச்சைகள் கிடைக்கும் என்று சொல்ல முடியாது. உங்களை நீங்களே பராமரித்து கொள்ளக்கூடிய ஒரு மோசமான கலாசாரத்திற்கு, அதுவும் நியாயமான கலாச்சாரத்திற்கு தள்ளப்பட வேண்டி இருக்கும். இந்த பத்து ஆண்டுகளில் தொழில்நுட்பம் தெரியாதவன் தன்னைத்தானே காப்பாற்றிக் கொள்ள முடியாது.
எனவே கற்றவன் கல்லாதவன் என்ற இரண்டு நிலைகளில் இருந்த மனித வாழ்க்கை, தொழில்நுட்பம் கற்றவன் தொழில்நுட்பம் கல்லாதவன் என்று மாறப்போகிறது. எனவே தொழில்நுட்பத்தை உங்கள் மகனிடம் உங்கள் பேரன் பேத்திகளிடம் கற்றுக் கொள்ள வேண்டும்.
ஒரு காலத்தில் தாத்தா படிக்க வைப்பார் தந்தை படிக்க வைப்பார். இப்போது அதெல்லாம் பேரன் படிக்க வைப்பார் பேத்தி படிக்க வைப்பாள். பேரன் பேத்தியை உங்கள் ஆசான்களாக கொண்டாலே ஒழிய நீங்கள் ஜீவிக்க முடியாது.
இப்பொழுதெல்லாம் நாகரிகமான பெண்கள் கழுத்து நிறைய நகை போடுவதில்லை. முன்பெல்லாம் மார்பிலிருந்து ஒரு தங்க அருவி, கழுத்தில் இருந்து ஒரு தங்க அருவி இறங்கி வயிற்றைக் கடந்து போய்க் கொண்டே இருக்கும். இப்போது படித்த பெண்கள் நூலாம்படை போல் ஒரு செயின் போட்டு இருக்கிறார்கள்
உயிரோடு உள்ள போதே படைப்பாளர்களையும் எழுத்தாளர்களையும் ஆசிரியர்களையும் மதித்து விடுங்கள். இந்த பெண் படைப்பாளர்களுக்கு பணம் பொருள் பரிசு தேவையில்லை. கைதட்டல் போதும் அவர்களுக்கு. வீட்டில் இந்த பெண் எழுத்தாளர்களை எவ்வளவு விரும்புவார்கள் என்று எனக்குத் தெரியாது. ஏனென்றால் வீட்டில் எழுத்தாளர்களை யாரும் விரும்ப மாட்டார்கள். குறிப்பாக பெண் எழுத்தாளர்களை மாமியாருக்கு பிடிக்காது. எழுத்தாளராக இருக்கிற ஆண் மிக பாவம். எழுத்தாளராக இருக்கிற பெண் மிக மிக மிக மிக பாவம். இந்த மிக மிக பாவங்களை தாண்டித்தான் எழுத வேண்டி இருக்கிறது. நீங்கள் வாழ வேண்டும். எழுத்தாளர்கள் எந்த காலத்திலும் மதிக்கப்பட்டதில்லை. பாரதியாரை புதுமைப்பித்தனை மதித்தீர்ர்களா?
எந்த தேசத்தில் கற்றவர்கள் மதிக்கப்படுகிறார்களோ அந்த ஆட்சி அறிவுள்ள ஆட்சி என்று பொருள். அந்த அரசன் அறிவுள்ள அரசன் என்று பொருள். இன்றைய தமிழக முதல்வர் ஸ்டாலின் எழுத்தாளர்களையும் படைப்பாளிகளையும் மதிக்கிறார் என்றால் அவர் அறிவுள்ள தந்தைக்குப் பிறந்த அறிவுள்ள தமிழன் என்பதனால் அவரை போற்றுகிறோம். சாகித்ய அகாடமி, ஞானபீடம், அல்லது அரசின் உயரிய விருது வாங்கும் படைப்பாளிகள் தமிழக அரசால் அவர்கள் விரும்பும் தளததில் அவர்கள் விரும்பும் ஊரில் வீடு வழங்கப்படும் என்று அறிவித்திருக்கிறார் முதல்வர். இன்று ஒரு சாகித்ய அகாதமி விருதிற்கு பரிசாக ஒரு லட்சம் ரூபாய் டெல்லியில் தருகிறார்கள். தமிழக முதல்வர் ஸ்டாலின் 2 கோடி ரூபாய் தருகிறார்.
இதுவல்லவோ தமிழ் எழுத்தாளர்களை மதிக்கிற ஆட்சி. இந்த ஆட்சிக்கு எனது வாழ்த்துக்களையும் ஸ்டாலினுக்கு எனது நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்'' என்று பேசினார்.
நிகழ்ச்சியில் தேனி மாவட்ட ஆட்சியர் ஷஜீவனா மற்றும் பல்வேறு துறை சார்ந்த அரசு அதிகாரிகள், எழுத்தாளர்கள், பேச்சாளர்கள், பொதுமக்கள் என திரளானோர் பங்கேற்றனர்.