“முன்னேறியதன் விளைவாக, தமிழ்நாட்டுப் பெண்கள் தங்கள் பெயருக்கு பின் சாதியை போடுவதில்லை!” - வைரமுத்து
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவனின் பிறந்த நாளையொட்டி 61 நாள்கள் சென்னை பெசன்ட் நகரில் தொடர் உணவு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற உள்ளது. இதன் தொடக்க விழா இன்று நடைபெற்றது.
இந்த விழாவில் சிறப்பு அழைப்பாளராக கவிஞர், பாடலாசிரியர் வைரமுத்து கலந்து கொண்டு தூய்மை பணியாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இதையடுத்து, செய்தியாளர்களுக்கு கவிஞர் வைரமுத்து பேட்டி அளித்தார். அவர் பேசுகையில், “திருமாவளவன் பிறந்த நாளை முன்னிட்டு உழைக்கும் பெண்களுக்கு அவர் தம் தோழர்கள் பரிசும் சிற்றுண்டியும் வழங்கிக் கொண்டாடுகிறார்கள். அவர்களை வாழ்த்துகிறேன். பெற்றுக்கொண்டு பெருமைப்படுத்திய உழைக்கும் பெண்களுக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த நாளில் நாட்டில் நடந்து கொண்டிருக்கும் சம்பவங்களை எல்லாம் கவலையோடு கவனித்துக் கொண்டிருக்கிறோம். சாதி என்கின்ற மாயப் பேய் ஒன்று ரத்தம் கேட்கின்றதே என்று எழுதுகிறோம். இருட்டினிலே உள்ளதடா உலகம் என்று கவிதை பாடுகிறோம். செயற்கை மனிதன் செவ்வாய் தரையில் சிற்றில் ஆடுகையில் இங்கு, இயற்கை மனிதர் சாதிச் சண்டையில் இடுப்பு முறிவதுவோ என்று கேள்வி கேட்கின்றோம்.
முன்னே வள்ளுவன், பின்னே பாரதி முழங்கினர். அட இன்னும் நீங்கள் திருந்தாவிட்டால், இலக்கியம் எதுக்கு என்று நாங்கள் சலித்துக் கொள்கின்றோம்.
நாட்டுத் தலைவர்கள் பாடுபட்டதெல்லாம் வீணாகி போய்விடுமோ என்று நம்புகிறோம். பிஞ்சு மனங்களில் நஞ்சை கலக்கக்கூடாது. அடித்தட்டு மக்களின் மனதில் சாதி என்ற பாகுபாட்டை நாம் விதைக்க கூடாது. கல்விக்கூடங்கள் சாதிகளை ஒழிக்க பிறந்த மன மருத்துவ நிலையங்கள். அந்த நிலையங்களிலேயே சாதி தலை தூக்குவதை நாம் இன்னும் பொறுத்துக் கொண்டிருக்க முடியாது.
சாதி என்பதை ஒரு அடையாளம் என்ற அளவில் மட்டும் கருதினால் போதும். அதற்குமேல் அதற்கு, இழிவு கொடுக்க வேண்டாம். அதற்கு, பெருமை கொடுக்க வேண்டாம். எல்லா சமூகங்களுக்கும் எல்லா பெருமைகளும் இருக்கிறது. கல்வியிலும், வீரத்திலும் தியாகத்திலும், உழைப்பிலும், தொழில்நுட்பத்திலும், எல்லா சமூக மக்களும் மேலேறி வருகிற பொழுதுதான் ஒரு நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சி, பெருமை பெறும். எனவே சாதி என்கின்ற மாய பிம்பத்தை கடந்து, கல்வி அறிவு, பகுத்தறிவு, உழைப்பு என்ற தளங்களில் நாம் முன்னேற வேண்டும்” என்றார்.
தொடர்ந்து ‘திரைப்படப் பாடல்களில் சாதி வலியுறுத்தப்படுகிறதா? உங்கள் கருத்து என்ன’ என்று எழுப்பப்பட்ட கேள்விக்கு...
“திரைப்படங்கள் சாதியை வலியுறுத்தப்படுவதற்காக எடுக்கப்படுபவை கிடையாது. ஏனென்றால், ஒரு சாதியை வலியுறுத்தி எடுக்கின்ற படம் வணிக ரீதியாக வெற்றி பெறுவது கிடையாது. எல்லா சாதி மக்களும் ஒரு திரைப்படத்தை பார்த்தால் தான் அந்த திரைப்படம் வெற்றி பெறும். ஒரு குறிப்பிட்ட சாதிக்காக மட்டும் எடுக்கப்படுகிற படம் அந்த குறிப்பிட்ட சாதி மக்களின் எண்ணிக்கையில் நின்று போகும். ஒரு திரைப்படத்தை தயாரிக்கிறவர்கள், இயக்குபவர்கள், நடிப்பவர்கள், யாரும் ஒரு குறிப்பிட்ட சாதிக்காக தங்களை அர்ப்பணித்துக் கொள்வது கிடையாது. ஆனால் அந்த குறிப்பிட்ட சமூகத்தின் சம்பவங்களை அவர்கள் மையப்படுத்துகிறார்கள் என்று மட்டும் புரிந்து கொண்டால் அங்கு சாதி தலை தூக்காது.
சாதியை ஒழிப்பதில் திராவிட கட்சிகள் இவ்வளவு முனைப்பு காட்டவில்லை என்றால், இந்த அளவு முன்னேற்றம் கூட நாட்டில் வந்திருக்காது. போதுமான அளவு நாம் இன்னும் சாதி ஒழிப்பில் வெற்றி பெறவில்லை என்று சொல்லிக் கொள்ளலாமே தவிர, சாதி ஒழிப்பில் முனையவில்லை என்று நாம் நினைத்துக் கொள்ளக்கூடாது.
வெளிமாநிலங்களில் கல்பனா ஐயர் என்று ஒரு பெண் பெயர் வைத்துக் கொள்கிறார். ஷில்பா ஷெட்டி என்று பெயர் வைத்துக் கொள்கிறார். கரீனா கபூர் என்றும் பெயர் வைத்துக் கொள்கிறார்கள். சாதியை தன் பெயருக்கு பின்னால் இட்டுக் கொள்கிறார்கள். ஆனால் தமிழ்நாட்டுப் பெண்கள் தங்கள் பெயருக்கு பின்னால் சாதி பெயரை இட்டுக் கொண்டது உண்டா?
இது பெண்ணுரிமையும், பெண் கல்வியும் முன்னேறிய நாட்டின் விளைவு என்று நான் புரிந்து கொள்கின்றேன். சாதியை ஒழிக்க வேண்டிய இடத்தில், இன்னும் நாம் முனைய வேண்டி இருக்கிறது என்று மட்டும் நாம் புரிந்து கொண்டால் போதும்”