இந்த மரணத்தோடு முடியட்டும் பிஞ்சுச்சாவுகள் என சுஜித் இறப்புக்கு கவிஞர் வைரமுத்து தன்னுடைய இரங்கல் கவிதையால் அஞ்சலி செலுத்தியுள்ளார்.
திருச்சி மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த குழந்தை சுஜித்தை மீட்கும் பணி 80 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்றது. ஆனால் மீட்பு பணிகள் இறுதியில் தோல்வியில் முடிந்தன. குழந்தை இருந்த ஆழ்துளைக் கிணற்றில் இருந்து துர்நாற்றம் வீசியதை அடுத்து மருத்துவர்கள் சோதனை செய்தனர்.
பின்னர் சுஜித்தின் உடல் அதிக அளவில் சிதைந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு குழுவினர் ஆழ்துளை கிணற்றில் சிக்கியிருந்த சுஜித்தின் உடலை மீட்டு வெளியே எடுத்து பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு சுஜித்தின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.
இந்நிலையில் சுஜித் இறப்புக்கு கவிஞர் வைரமுத்து தன்னுடைய இரங்கல் கவிதையால் அஞ்சலி செலுத்தியுள்ளார். இது குறித்து வெளியிட்டுள்ள வீடியோவில், "உலகத்தின் நீளமான சவக்குழி இதுதானோ என்னவோ?நடக்கக் கூடாதது நடந்தேறிவிட்டது. மரணத்தில் பாடம் படிப்பது மடமைச் சமூகம். மரணத்திலும் கல்லாதது அடிமைச் சமூகம்.
மரணக்குழிக்குள் மண் விழுவதற்குள் அனைத்து குழிகளையும் மூடுக. மெழுகுவர்த்தி அணைவதற்குள் கண்ணீரை துடைத்துவிடு. வானம் பார்க்கும் தொழில்நுட்பமே, குனிந்து பாதாளம் பார். இந்த மரணத்தோடு முடியட்டும் பிஞ்சுச்சாவுகள்’’ என தெரிவித்துள்ளார்