தாசியை வேசி என திரித்து மதக்கலவரத்தை தூண்டுகிறார்கள்: வைரமுத்து விளக்கம்

தாசியை வேசி என திரித்து மதக்கலவரத்தை தூண்டுகிறார்கள்: வைரமுத்து விளக்கம்
தாசியை வேசி என திரித்து மதக்கலவரத்தை தூண்டுகிறார்கள்: வைரமுத்து விளக்கம்
Published on

ஆண்டாள் சர்ச்சை குறித்து விளக்களித்து வீடியோ வெளியிட்ட வைரமுத்து, ஆண்டாளின் புகழ் பாட ஆசைப்பட்டது தவறா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

ஆண்டாள் குறித்து ராஜபாளையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் வைரமுத்து கட்டுரை ஒன்றினை வாசித்தார். வைரமுத்து வாசித்த கட்டுரையில் ஆண்டாளை தேவதாசி மரபைச் சேர்ந்தவராக இருக்கலாம் என்பது போன்ற மேற்கொள் ஒன்றினை பதிவு செய்திருந்தார். ஆண்டாள் குறித்த வைரமுத்துவின் கட்டுரைக்கு சில இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக இந்த பிரச்சனை நீடித்து வருகிறது. வைரமுத்து இரண்டு முறை வருத்தம் தெரிவித்த போதும் பிரச்சனை முடிவுக்கு வரவில்லை. 

இந்நிலையில், ஆண்டாள் சர்ச்சை தொடர்பாக வைரமுத்து இன்று வீடியோ பதிவு மூலம் விளக்கம் அளித்துள்ளார். அதில்,  ஆண்டாள் புகழ்பாட தான் ஆசைப்பட்டது தவறா என்று கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் வைரமுத்துவின் வீடியோவில், “10 நாட்களாக நான் மூர்ச்சையுற்று கிடந்தேன். என் மனம் உடைக்கப்பட்டு கிடக்கிறது. ஆண்டாள் பாசுரங்களை பாடப்பாட எனக்கு பக்தி பிறக்கிறது; சக்திபிறக்கிறது. ஆணாதிக்க சமூகத்தை எதிர்த்த ஆண்டாளின் பெருமைகளை வியந்து பாராட்டினேன். தமிழ்வெளியில் கேட்ட முதல் பெண் விடுதலை குரல், ஆண்டாளின் குரல். 

ஆண்டாள் பற்றி மட்டும் எழுதப்பட்ட கட்டுரை அல்ல அது. புதிய தலைமுறையினரும், இளைய தலைமுறையினரும் தெரிந்து பயன்பெறவே கட்டுரை எழுதி வருகிறேன். சமய, சமூகவியல் பார்வையுடையவள் ஆண்டாள். ஆண்டாள் குறித்த ஆராய்ச்சி கட்டுரைகளை 3 மாதங்களாக ஆராய்ச்சி செய்தேன்.  

தேவதாசி என்பது உயர்குலப் பெண்களுக்கு வழங்கப்பட்ட சொல். அதனை மூலத்தில் எழுதியவர்கள் உயர்ந்த பொருளில் எழுதியுள்ளார்கள். நானும் உயர்ந்த பொருளில் எடுத்து பயன்படுத்தியுள்ளேன். கட்டுரை வாசித்த அன்று அங்கு இருந்த மக்கள் என்னை அப்படி பாராட்டினார்கள். என்னை வழியனுப்ப 40 நிமிடங்களுக்கு மேல் எடுத்துக் கொண்டார்கள். இகழ நினைத்தால் ஆண்டாளின் மண்ணில் சென்று கருத்தரங்கு நடத்துவேனா?.

யாரோ மதம் கலந்து அரசியலுடன், அரசியல் கலந்த மதத்துடன் எனது பேச்சை திருத்திவிட்டார்கள். தேவதாசி என்று நான் குறிப்பிட்டதில் தேவ என்ற வார்த்தையை துண்டித்துவிட்டு தாசி என்று பரப்பினார்கள். பின்னர் தாசி என்பதை திருத்தி வேசி என்று கூறினார்கள். இல்லாத சொல்லுக்காக பழியேற்ற பின்னரும் திரித்து கூறி வருகிறார்கள். மன்னிப்பு கேட்ட பிறகும் மேலும் மேலும் திரிக்கிறார்கள், பரப்புகிறார்கள், இனக்கலவரத்தை, மதக்கலவரத்தை ஏற்படுத்த பார்க்கிறார்கள் என்றால் தமிழ் சமூகமே நீ ஞான சமூகம் புரிந்து கொள்வாய்” இவ்வாறு பேசினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com