திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு தொடர்ந்து 10 நாட்கள் சொர்க்கவாசல் திறக்கப்படும் என திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
வைஷ்ணவர்களின் முக்கிய விரத நாளான வைகுண்ட ஏகாதசி, பெருமாள் கோயில்களில் சிறப்பாக கொண்டாடப்படும். அன்று நடைபெறும் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்வில் பங்கேற்றால் அனைத்து பாவங்களும் நீங்கி வைகுண்டம் அடையலாம் என்பது ஐதீகம்.
அந்த வகையில் ஆந்திர மாநிலம் திருப்பதியிலும் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்வு சிறப்பாக நடைபெறும். இந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக சொர்க்கவாசல் திறப்பு குறித்து திருமலையில் தேவஸ்தானத்தின் சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
அப்போது சொர்க்கவாசல் திறப்பது குறித்து மடாதிபதிகள் மற்றும் பீடாதிபதிகளிடம் ஆலோசனை கேட்கப்பட்டது. அதன்படி டிசம்பர் 25 முதல் ஜனவரி 3ஆம் தேதி வரை தொடர்ந்து 10 நாட்கள் சொர்க்கவாசல் திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
கொரோனா நோய் பரவலால் காரணமாக பக்தர்களுக்காக இந்த வசதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.