தனது உரையை கேட்டுத்தான் ரவிச்சந்திரன் இலங்கை சென்று விடுதலை புலிகள் அமைப்பில் சேர்ந்ததாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
மதிமுக சார்பில், சென்னை எழும்பூரில் உள்ள மதிமுக தலைமை அலுவலகத்தில் மாவீரர் நாள் வீரவணக்க புகழஞ்சலி கூட்டம் நடைபெற்றது. முன்னதாக ஈழப் போரில் உயிர் நீத்த போராளிகள் நினைவாக புகழஞ்சலி செலுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் மேடையில் பேசிய மதிமுக பொது செயலாளர் வைகோ, “இலங்கையில் ஆதியில் இருந்தது தமிழர் தேசம் தான். பின்னால் வந்து குடியேறியவர்கள் தான் சிங்களர்கள். இலங்கையில் ஈழம் அமைய பொது ஜன வாக்கெடுப்பை நடத்த வேண்டும் என முதலில் கேட்டவன் நான் என்பதை யாரும் மறுக்க முடியாது. எனது வாழ்க்கையில் நான் செய்த சாதனை இது. இதுபற்றி தற்போது பலர் பேசுகிறார்களே தவிர, அதை முதலில் கேட்டவன் நான் என்பதை சொல்வது இல்லை” என விமர்சித்தார்.
தமிழர் வரலாற்றில் பிரபாகரனுக்கு இணையான தலைவன் கிடையாது. ராஜிவ் படுகொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட ஏழு பேரில் ஒருவரான ரவிச்சந்திரன் எனது உறவினர். இதை இதற்கு முன் யாரிடமும் சொன்னது இல்லை. சில நாட்களுக்கு முன்பு என்னை அவர் சந்தித்தார். அப்போது, உங்கள் உரையை கேட்டுத்தான் நான் ஈழத்திற்கு சென்று புலிகள் படையில் சேர்ந்ததாக அவர் கூறியதாக வைகோ தெரிவித்தார். தொடர்ந்து, 13வது திருத்தம் இந்தியாவும் இலங்கையும் சேர்ந்து செய்த மோசடி எனவும், அதை நம்ப வேண்டாம் எனவும் கூறிய வைகோ, தமிழ் ஈழம்தான் தீர்வு என கூறினார். இந்தியா என்று ஒரு நாடு கிடையாது. பல தேசங்கள் கொண்ட ஒரு கூட்டமைப்பு எனத் தெரிவித்தார். எதிர்காலத்தில் அங்கே ஒரு தமிழ் ஈழம் இங்கே ஒரு தமிழ்நாடு அமையதான் போகிறது என வைகோ கூறினார்.
முன்னதாக பேசிய மே 17 அமைப்பு ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, விடுதலை புலிகளுக்கு ஒரு நாளும் மரணம் கிடையாது. செயலின் மூலமாக அரசியலை செய்தவர் பிரபாகரன் என புகழ்ந்தார். சுனாமி சமயத்தில் மக்களை காப்பாற்ற கடலை நோக்கி மரணத்திற்கு அஞ்சாமல் ஓடியவர்கள் விடுதலை புலிகள் என தமிகத்தில் இருந்து இலங்கை சென்றிருந்த கலைஞர்கள் தெரிவித்ததாக குறிப்பிட்டார். மேலும், விடுதலை புலிகளின் அரசியல் குரலாக ஒலித்தது வைகோவின் குரல் மட்டுமே; நாடாளுமன்றம் உள்ளிட்ட பல்வேறு தளங்களில் அவரது குரல் தொடர்ந்து ஒலித்தது, இன்றும் ஒலித்துக்கொண்டு வருகிறது எனக் கூறினார்.