தேசத் துரோக வழக்கில் வைகோ குற்றவாளி என சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. அத்துடன் அவருக்கு ஓராண்டு சிறையும், 10 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2009-ஆம் ஆண்டு நடைபெற்ற 'நான் குற்றம்சாட்டுகிறேன்' என்ற புத்தக வெளியீட்டு விழாவில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது அவரின் பேச்சு, மத்திய அரசுக்கு எதிராகவும், விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகவும் இருந்ததாக கூறி வைகோ மீது தேச துரோக வழக்கு ஆயிரம் விளக்கு காவல் நிலையத்தினரால் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் 2017-ஆம் ஆண்டு ஏப்ரல் 4ஆம் தேதி புழல் சிறைக்கு அனுப்பப்பட்ட வைகோ மே 25-ஆம் தேதி ஜாமீனில் வெளியே வந்தார்.
பின்னர் இந்த வழக்கு சென்னை சென்னை மாவட்ட கூடுதல் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்ட பிறகு 2018 ஆகஸ்ட் 2-ஆம் தேதி குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் எம்.பி.,எம்.எல்.ஏ-க்கள் மீதான வழக்கை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டவுடன், இந்த வழக்கு அங்கு மாற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து அரசு தரப்பில் சமர்ப்பிக்கப்பட்ட 9 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது. சாட்சியத்தின் அடிப்படையில் வைகோவிடம் விளக்கம் கேட்கப்பட்டது. இதனையடுத்து வழக்கின் தீர்ப்பை ஒத்திவைப்பதாக ஜூன் 19-ஆம் தேதி நீதிபதி ஜெ.சாந்தி உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில் வழக்கின் தீர்ப்பை சென்னை சிறப்பு நீதிமன்றம் இன்று வழங்கியது.
அதன்படி வைகோவை குற்றவாளி என அறிவித்த நீதிமன்றம் அவருக்கு ஓராண்டு சிறைத் தண்டனையையும், 10 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். ஓராண்டு சிறை தண்டனையை எதிர்த்து வைகோ மேல்முறையீடு செய்ய ஒரு மாத கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.